Deepfake: “AI மூலம் என் குரலை தவறாக பயன்படுத்தினால்…'' – பில் கேட்ஸிடம் பேசிய நரேந்திர மோடி!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தனது சுற்றுப்பயணங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

அந்தவகையில் பிப்ரவரி 29 அன்று டெல்லியில் உள்ள 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பில்கேட்ஸ் சந்தித்து உரையாடினார். பில்கேட்ஸுடனான மோடியின் உரையாடல் 45 நிமிட வீடியோவாக மோடியின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. 

சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் டெக்னாலஜி குறித்து மோடி பில்கேட்ஸுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

ஏஐ

ஏஐ என்ற மாய கருவி…

டெக்னாலஜி குறித்து பேசிய மோடி, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் டிஜிட்டல் கல்வியை வழங்குவதே என்னுடைய அரசின் நோக்கம். 

ஏஐ போன்ற சக்திவாய்ந்த கருவிகள் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும்; இவற்றால் உண்மையான மனித நிபுணத்துவத்தை மாற்ற முடியாது.

நாம் செயற்கை நுண்ணறிவை ஒரு மாய கருவியாக பயன்படுத்தினால், பெரும் அநீதி இழைக்கப்படலாம் அல்லது சோம்பேறித்தனத்தின் காரணமாக நான் ஏஐ பயன்படுத்தினால்… உதாரணத்திற்கு நான் யாருக்காவது ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தால், அதை நானே செய்யாமல், அதற்குப் பதிலாக எனக்கான கடிதத்தை வரைவு செய்ய ChatGPTயிடம் கேட்டால், அது தவறான வழி. நான் ChatGPT உடன் போட்டியிட வேண்டும். நான் அதனுடன் போராட வேண்டும்’’ என்றார்.

ஏஐ-ஆல் தவறாக உருவாக்கப்படும் விஷயங்கள் மற்றும் பிற சிக்கலை பில்கேட்ஸ் ஒப்புக் கொண்டார்.

அச்சுறுத்தும் AI (Deepfake videos)

டீப்ஃபேக் அபாயங்கள்…

தொடர்ந்து பேசிய மோடி, “இந்தியா போன்ற ஒரு பரந்த ஜனநாயக நாட்டில், யாராவது டீப்ஃபேக்கைப் பதிவேற்றினால், உதாரணமாக யாராவது என் குரலில் ஏதேனும் தவறாகப் பதிவேற்றினால், முதலில் மக்கள் அதை நம்புவார்கள். அது குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

டீப்ஃபேக் ஏஐ- ஆல் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதும் அதன் மூலத்தைக் குறிப்பிடுவதும் முக்கியம். இது போன்ற சக்தி வாய்ந்த விஷயங்கள், முறையான பயிற்சி இல்லாமல் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது’’ என்றார்.

டீப்ஃபேக்கில் நரேந்திர மோடியின் குரலை கேட்டுள்ளீர்களா, அப்படியென்றால் என்ன கேட்டீர்கள் என்பதை கமென்டில் சொல்லுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.