ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் ‘அதென்ன மொத ராத்திரி… மொத பகல்னு இருக்கக்கூடாதா…’ என்று. இதே கேள்வியை சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.
”உலகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது. அதனால்தான், நம் கலாசாரத்தில் முதலுறவு நாளை முதலிரவு என்று குறிப்பிடுகிறார்கள். மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பகலெல்லாம் வேட்டையாடிவிட்டு, ஓய்ந்திருக்கும் இரவு வேளைகளில் உறவுகொள்ள ஆரம்பித்தார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பு உருவான பிறகு, தாங்கள் உறவுகொள்வது மற்றவர்கள் கண்களில் படக்கூடாது என்பதற்காக இரவையே உறவுக்கான நேரமாகத் தொடர்ந்தார்கள். இதுவே பின்னாளில், `அய்யோ, யாராவது பார்த்துட்டா’ என்று இரவையே தாம்பத்திய உறவுக்கான நேரமாகத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாகிவிட்டது.
அடுத்து அரசர்கள் காலம். நாகரிகம், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரமெல்லாம் உருவாகிவிட்டது. ஆனால், அரண்மனையே என்றாலும் அறைகளுக்கு கதவில்லை. திரைச்சீலைகள் மட்டும்தான். அரசனும் அரசியும் இணைந்திருக்கும் நேரத்தில், அவர்களின் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த பங்கா (விசிறி)வை பக்கத்து அறையிலிருந்து பணிப்பெண்கள் இயக்கிக் கொண்டிருப்பார்கள். அப்போதும் இரவுதான் உறவுக்கு அந்தரங்கமான நேரமாக இருந்தது.
கதவுகள் புழக்கத்துக்கு வந்த பிறகும், எல்லோராலும் அவற்றை வாங்க முடியவில்லை. துணி, கோணி என்று அவரவர் பொருளாதாரத்துக்கு ஏற்பதான் வீட்டு வாசலை மறைக்க முடிந்தது. எல்லோர் வீட்டுக்கும் கதவுகள் வைக்கிற சூழல் வரும்வரையில் இரவும் இருட்டும்தான் உறவுக்கு பாதுகாப்பான நேரமாக இருந்தது.
மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னாள்வரை, இரவுகள் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரைக்கும் மிகவும் நீண்டதாக இருந்தன. அது உறவுக்கு தோதாக இருந்தது. இப்படித்தான் இரவு தாம்பத்திய உறவுக்கான பொழுதாக மாறியது. கூச்சம் காரணமாக உறவுகொள்ளத் தயங்குகிற புதுமணத் தம்பதியருக்கு இரவும் இருட்டும்தான் பொருத்தமானது. திருமணமாகி, சில பல வருடங்கள் ஆனவர்களென்றால் குழந்தைகள் தூங்கிய பிறகு உறவுகொள்வதற்கும் இரவுதான் வசதி. உடலமைப்பில் சின்னச் சின்ன குறைபாடுகள் இருப்பதாக நினைத்து தாழ்வு மனப்பான்மை கொள்பவர்களுக்கும் இரவும் இருட்டும் முழு மனதுடன் உறவில் ஈடுபட உதவி செய்யும். மற்றபடி, இன்றைக்கு இரவை பகல்போல மாற்றும் மின்சார விளக்குகள் இருக்கின்றன. அதே நேரம் ஜன்னல்களையும் கதவையும் மூடினால் நண்பகலும் இரவுபோலத்தான் இருக்கிறது, தற்போது. கூடவே பாதுகாப்பான கதவுகளும் இருக்கின்றன. அதனால், தம்பதியருக்கு விருப்பமிருந்தால் எந்நேரமும் தாம்பத்திய உறவுக்கான நேரமே” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.