ஒரு வெற்றி ஒரு தோல்வி என தங்கள் கடந்த இரு போட்டிகளிலும் பெற்று, இரண்டாவது வெற்றிக்கான முனைப்புடன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல்லின் 12வது போட்டியில் பலபரிட்சை நடத்தின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தனர்.
முதல் ஓவரை ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய் வீச மயங்க் அகர்வாலும் டிராவிஸ் ஹெட்டும் களத்தில் இறங்கினர். முந்தைய போட்டியில் அடித்து பறக்கவிட்ட ஹெட் இந்த முறை சரியாக கேப்களை பிடித்து 2 பவுண்டரிகளை சேகரித்து சிறப்பான தொடக்கத்தைத் தர முதல் ஓவரில் 11 ரன்கள் சேர்ந்தன. அடுத்து ஓவரை வீசிய உமேஷ் யாதவ் ஸ்லிப்பில் ஆட்களை வைத்து பயம் காட்டி பவுண்டரியே இல்லாமல் தப்பிக்க பார்த்தாலும், “மாடிக்கிட்ட பங்கு” என ஸ்லாட்டில் வந்த பந்தைத் தரையோடு தரையாக மின்னல் வேகத்தில் தட்டி பவுண்டரியை வாங்கிக் கொண்டார் ஹெட். தயங்கி தயங்கி ஒருநாள் போட்டி போல “பாத்து பந்துக்கு வலிக்கப் போகுது” எனப் பொறுமையாக விளையாடிக் கொண்திருந்த மயங்க் அகர்வாலிடம் “தம்பி இது டி 20 போட்டி” என யாரோ நியாபாகப்படுத்த பந்தைத் தூக்கி அடிக்க முயற்சி செய்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒமர்சாய் பந்தில் கேட்ச் ஆனார்.
அடுத்து போனமுறை ஹெட்டிடம் போட்டி போட்டுக் கொண்டு பாட்னர்ஷிப் சேர்த்த அபிஷேக் ஷர்மா அவருடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் தனது முதல் ஓவரை வீச வந்தார் அனுபவ மந்திர சூழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான். அந்த மந்திரமெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாதுப்பா என தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார் அபிஷேக் ஷர்மா. 6 ஓவர் முடிவில் 56-1 என்று பவர் பிளேயை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
முதல் 6 ஓவர்களில் சில பிரமாதமான ஷாட்களை அடித்திருந்தாலும் சில பந்துகளை முழுமையாக விளையாட முடியாமல் திணறி இருந்தார் ஹெட். அதைத் துல்லியமாக கணித்த சைனா மேன் பந்துவீச்சாளர் நூர்அகமது மிடில் ஸ்டம்ப் பறக்க க்ளீன் போல்ட்டாக்கி ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட் போன சூழலில் “இப்ப தும்முனாதான் சரியா இருக்கும்” என போன ஓவரில் நடந்த ஆசம்பாவிதத்தை சரி செய்து 4 ரன்களை மட்டுமே கொடுத்து, எக்கானமியை சிக்கனமாக சரிசெய்துகொண்டார் ரஷீத்கான்.
கடைசி 20 பந்துகளில் பவுண்டரிகளே இல்லை என்ற நிலையில் 9வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஃபோரினை அடித்து வளர்ந்த ஸ்ட்ரீக்கினை முடித்து வைத்தார். இருந்தும் மத்தியான சாப்பாடு முழுமையாக சாப்பிட்டுவிட்டு, வெத்தலைக்குக் காத்திருக்கும் மந்தமான நிலையில் ஆட்டம் நகர்ந்தது. அதிலும் மோஹித் சர்மாவின் 10 வது ஓவரில் 1,1,1,1,1,1 கோடு போட்டு சிங்கிள் தட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த ஓவரின் கடைசி பந்தை ஒற்றை கையில் தூக்கி அடிக்க முயற்சி செய்த அபிஷேக் சர்மா 29(20) கேப்டன் கில்லிடன் கேட் ஆனார். 10 ஓவர் முடிவில் SRH 74-3 என்ற நிலையை எட்டியது.
அடுத்து இந்த வருடத்தில் T 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திரமான கிளாசன், மார்க்ரமிடம் ஜோடி சேர்ந்தார். தனது முதல் பந்திலே ஃபோருடன் தொடங்கியவர், நூர் வீசிய 13வது ஓவரில் தொடர்ந்து கவ் கார்னரில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். இந்த முறையும் கம்ப்ளீட் ஆக்சன் பிளாக் இருக்கிறது என்று நினைத்து முடிப்பதற்குள், ரஷீத் கானின் சூழலில் கிலோசனார் கிளாசன். “நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” என அவர் டக்அவுட்க்கு போய் சேர்வதற்குள் தனது டெஸ்ட் இன்னிங்ஸை முடித்து நடையை கட்டினார் மார்க்ரம் 17(19). அடுத்து களமிறங்கிய அப்துல் சமாத் சமத்தாக முதல் இரண்டு பந்திலே 2 பவுண்டரிகளை விளாசினார். 15 ஓவர் முடிவில் 122-5 என்ற நிலையை எட்டியது.
அடுத்ததாக டெத் ஓவர் ஸ்பெஷலிஸம் எனும் தங்கள் அஸ்திரத்தை GT கையில் எடுத்தது. “நாய் என்று நரியை வளர்த்த நபர்” என்ற செய்தியை போல வேகப்பந்து வீச்சாளரின் பந்து என்று நினைத்து ஸ்லோயர் பந்துகளை அடித்த SRH வீரர்கள் என்ற நிலை உருவானது. இருந்தும் ஆங்காங்கே பவுண்ட்டரிகளை விரட்டி ஆட்டத்தின் அதிக பார்னர்ஷிப்பாக 45 ரன்களை சேர்த்தது ஷபாஸ் அகமது, அப்துல் சமாத் கூட்டணி. கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா 100kmph தண்டாமல் ஸ்லோவர் பந்துகளை வீசி, ஷபாஸ் அகமது 22(20), வாஷிங்டன் சுந்தர் 0(1) என அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட் எடுத்து அசத்தினார். அதே போல கடைசி பந்தில் 2வது ரன் ஓட முற்பட்டு அப்துல் சமாத் 29(14) ரன் அவுட் ஆனார். எந்த வீரரும் 30 ரன்கள் தாண்டாத நிலையில் 162-8 என்று தன் இன்னிங்ஸை முடித்து கொண்டது SRH.
பிட்ச் ஸ்லோவாக இருக்க சேஸிங் சுவரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை கில் மற்றும் சாஹா தொடங்கினார். முதல் ஓவரை புவனேஷ்குமார் 7 ரன்களை மட்டுமே கொடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இரண்டாவது ஓவரிலே ஸ்பின் அட்டாக்கினை தேர்வு செய்து ஷபாஸ் அகமதினை எடுத்து வந்தார் கம்மின்ஸ். ஆனால் அதற்கான தண்டனையாக மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். அப்படியாக அந்த ஓவரில் 11 ரன்களை கொடுத்தாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து அடுத்த ஓவரை மீண்டும் கையில் கொடுத்தார் கம்மின்ஸ். தன் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முதல் பந்திலே சாஹாவின் 23(13) விக்கெட்டை வீழ்த்தி ‘சபாஷ்’ வாங்கினார் ஷபாஸ். பவர் பிளேயின் கடைசி ஓவரை வீச வந்த புவனேஷ்குமார் ஆக்சன் ரிப்ளே போல முந்தைய ஓவரில் கொடுத்த அதே 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் 6 ஓவர் முடிவில் 52-1 என்ற நிலையை எட்டியது.
சாய் சுதர்ஷனுடன் கூட்டணி சேர்ந்த கில், தேவையான ரன்ரேட்டினை எட்டுக்கு மேலே செல்லாமல் பொறுப்பாக பார்த்துக்கொள்ள 9 ஓவர் முடிவில் 74-1 என்ற நிலையை எட்டியது. டைம் அவுட்டுக்கு பின் வந்த முதல் பந்திலே கில் 36(28) மார்கெண்டேயின் சூழலில் சிக்கி காலியானர். இதனையடுத்து உள்ளே வந்த மில்லரிடம் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை விரட்டி 42 பந்துகளில் 65 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆட்டம் மலையாள சினிமாக்கள் போல மெதுவாக போய் கொண்டிருக்க, மார்க்கண்டே வீசிய 16வது ஓவரில் ஹரி படம் சுமோக்கள் போல 4,4,6,6 என பவுண்டரிகளை பறக்க விட்டனர் மில்லரும், சாய் சுதர்சனும். அடுத்த ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலே சாய் சுதர்சன் 45 (36) அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாலும் கண்கெட்ட சூரிய நமஸ்காரம் என்பது போலவே SRHக்கு அமைந்தது.
ஏனெனில் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிகளை விளாசிய மில்லர் , விஜய் சங்கர் ஜோடி கடைசி ஓவரில் 1 ரன்கள் தேவை என்ற இடத்துக்கு அணியை கொண்டுவந்தது. இப்படியிருக்க இமாலய சிக்ஸரை அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியை 19.1 பந்தில் உறுதி செய்தார் கில்லர்,கில்லர் டேவிட் மில்லர் 44(27).