புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது.
சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.
2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது.
தற்போது நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா – சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.
சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை உள்ளன. இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது. மார்ச் 23 அன்று சீனா தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான பகுதி” என்று கூறினார்.