இங்கிலாந்தில் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு.. பிரதமரின் தொகுதியும் ரிஸ்க்

லண்டன்:

இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ மெகா கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் 250 எம்.பி.க்களை இழக்கும் என்றும், தொழிலாளர் கட்சி 468 இடங்களை பெற்று வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவர் வெற்றி பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது. சான்சலர் ஜெரமி ஹன்ட்டின் புதிய தொகுதியான கோடால்மிங் மற்றும் ஆஷ் தொகுதியிலும் இதே நிலை காணப்படுகிறது. இந்த தொகுதியில் லிபரல் டெமாக்ரட்ஸ் வெறும் 1 சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ளது.

மந்திரிசபையில் உள்ள 28 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிடும்பட்சத்தில் அவர்களில் 13 பேர் மட்டுமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.