புதுடெல்லி: கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மிகச் சிறிய தீவான அதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். நீளம் 1.7 கிமீ.
கடந்த 1948-ம் ஆண்டு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையில் கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஜமீன்தார் வசம் இருந்தது என்றும் அதன்பிறகு அது மெட்ராஸ் மாகாணத்தின் அங்கமாக மாறியது என்றும் இந்தியா கூறியது. டச்சு மற்றும் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி முதலே கச்சத்தீவு தங்கள் வசம் இருந்ததாக கூறிய இலங்கை, குறிப்பாக 1921 முதல் கச்சத்தீவு மீது அதிகாரப்பூர்வமாக உரிமை இருப்பதாகக் கோரியது.
இருநாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக இழுபறி நிலவி வந்த நிலையில், 1974-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கச்சத் தீவை இலங்கையின் பகுதியாக அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.அப்போது தமிழ்நாட்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்தார்.
இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் முக்கியத் தகவல்கள்:
தங்களிடம் அனுமதி பெறாமல் இந்திய ராணுவம் கச்சத்தீவுக்கு வரக்கூடாது என்று கூறிய இலங்கை ராணுவம், 1955-ல் கச்சத் தீவில் பயிற்சியில் ஈடுபட்டது.
கடந்த 1960-ம் ஆண்டில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் செதல்வாத், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கே உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.
கச்சத்தீவு குறித்து 1961-ம்ஆண்டு நேரு கூறியது: இந்தச்சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரப்போவதில்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை விரும்பவில்லை என்றார்.
ஆனால், கே.கிருஷ்ண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள், கச்சத்தீவுக்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டனர். அதுவே, குண்டேவியா உள்ளிட்ட அதிகாரிகள், கச்சத் தீவு மீதான இந்தியாவின் உரிமை குறித்து சந்தேகத்தை முன்வைத்தனர். அதன்பிறகு தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக்கொடுக்க இந்தியா முடிவு செய்தது.
இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது உள்ளிட்ட காரணங்களும் இந்தியா இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய வெளியுறவுத் துறை செயலர் கேவல் சிங், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தார்.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 1974-ம் ஆண்டு கச்சத்தீவின் மீதான இலங்கையின் உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முதலில் 1974-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கொழும்புவிலும், பிறகு ஜூன் 28-ம் தேதி டெல்லியிலும் கையெழுத்தானது.
காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது: பிரதமர் – பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது.
இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.