தேனி: தேனி தொகுதியில் ஏராளமான கேரள ஜீப்கள் பிரச்சாரத்துக்காக களம் இறக்கப்பட்டுள்ளன. ஜெனரேட்டருடன் மைக், ஸ்பீக்கர், திறந்தவெளி மேல்புறம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் பல கட்சியினரும் இந்த விஷயத்தில் ‘கூட்டணி அமைத்து’ கேரள ஜீப்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தேர்தல்களில் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. தேனி தொகுதியைப் பொறுத்தளவில் போட்டியிடும் கட்சியுடன், கூட்டணி கட்சி நிர்வாகிளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேனி தொகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. பிரச்சாரத்தைப் பொறுத்தளவில் ஜீப் இதற்கு மிக ஏற்றதாக இருக்கிறது. வண்டியின் மேல் உள்ள தார்ப்பாலினை நீக்கிவிட்டு ஒரே வாகனத்தில் முக்கிய நிர்வாகிகள் பலரும் பார்வைக்காக நின்று கொள்ளலாம்.
இதற்காக விளக்கு, ஸ்பீக்கர் போன்றவற்றையும் ஜீப்பிலே பொருத்திக் கொள்ள முடியும். மின் விநியோகத்துக்கான ஜெனரேட்டரையும் வைத்துக் கொள்ள ஜீப்பின் முன்பகுதியிலே இடம் உண்டு. ஜீ்ப்களைப் பொறுத்தளவில் அருகில் உள்ள இடுக்கி மாவட்டத்திலே அதிகம் உள்ளன.
அங்கு மேடு, பள்ளம், சரிவுநிறைந்த பகுதியாக இருப்பதால் கார்களை விட ஜீப்களே அதிக பயன்பாட்டில் உள்ளது.இதற்காக மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில்இருந்து 150க்கும் மேற்பட்ட ஜீப்கள் தேனி தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
இது குறித்து கேரள ஜீப் டிரைவர்கள் கூறுகையில், “டீசல் தவிர நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2ஆயிரத்து 500 வாடகை வருகிறது. மேலும் டிரைவர் படி, உணவு, தங்கும் இட வசதியும் உண்டு. கேரளா தேர்தலிலும் ஜீப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தளவுக்கு வாடகை தருவதில்லை. தேர்தல், அரசு பணிகளுக்கு சென்றாலும் குறைந்த கட்டணத்தை அதுவும் சில மாதங்கள் கழித்தே தருவார்கள். அதனால் தமிழகத்துக்கு வந்து விட்டோம்” என்றனர்.
கட்சியினர் கூறுகையில், “கேரள ஜீப் டிரைவர்கள் இங்கேயே தங்கி வேலைபார்க்கிறார்கள். மேலும் கால நேரம் எதுவும் பார்ப்பதில்லை. விஐபி பிரச்சாரங்களுக்கு பெரிய அளவிலான வேன்களை பயன்படுத்திக் கொள்கிறோம். வேட்பாளர் பிரச்சாரம் மட்டுமல்லாது, ஸ்பீக்கர் மூலம் பிரச்சாரம் செய்யவும் கேரள ஜீப்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன” என்றனர்.