நாகை தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: இந்திய கம்யூ. புகார்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இன்று காலை 9.00 மணி அளவில் நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் இயங்கி வரும் சாய் டொமஸ்டிக் கேஸ் சப்ளையர் மற்றும் நீலா மேல வடம்போக்கி தெருவில் இயங்கி வரும் பார்வதி இந்தியன் கேஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் பெரும் கூட்டமாக நிற்பதாக செய்திகள் வந்தது. இது குறித்து விசாரித்தபோது, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் கார்டுகளை தங்கள் கேஸ் இணைப்புகளுடன் இணைக்க வேண்டும் .அவ்வாறு இணைத்தால், உடனடியாக அவர்களது வங்கி கணக்குக்குகு ரூபாய் 300 மானியமாக ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து கிடைக்கும் என்று கூறப்பட்டதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இது உண்மைக்கு புறம்பானது. அவ்வாறு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. அப்படியே, மானியம் வழங்கப்படுவதாக இருந்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது போன்று பொதுமக்களிடையே மறைமுக ஆதரவு தேடுவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதற்குப் பின்னணியில் பாஜகவினர் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஊழல் முறைகேடுகள் மற்றும் பணப் பட்டுவாடா செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.