கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “விழுப்புரம் வேட்பாளரான ரவிக்குமார் ஒரு அற்புதமான பேச்சாற்றல் மிக்க வேட்பாளர். மிகவும் அறிவுப்பூர்வமாக இயங்க கூடியவர்.
அவருக்கு பானை சின்னம் கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் மதுரை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாய்வில், தமிழரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள்தான் பானை. தமிழரின் 4,000 ஆண்டுகள் பழமையையும், தொன்மைகளையும் கலாசாரம் மற்றும் பண்பாட்டை தேடும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷமே பானைதான். தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் பானை சின்னத்தை நமது ரவிக்குமார் பெற்றிருப்பதை பெருமையாக உணர்கிறேன். நம் திராவிட அரசியல் நான்கு தலைமுறைகளை கடந்துள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் என தற்போது ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக இயங்கி வரும் இந்த திராவிட ஆட்சியை, இன்னும் 50 ஆண்டுகள் எடுத்துச் செல்லும் வகையில் அமைச்சர் உதயநிதி பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்கள் குறித்தும், ரவிக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பானை சின்னம் குறித்தும் மக்களிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குங்கள்.
தமிழகத்தில் பெரியார் மற்றும் அண்ணா இருவரும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து அறிவுறுத்தினர். அவர்களது வழியில் வந்த கலைஞரும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நூற்றுக்கணக்கான கல்லூரிகளை கட்டமைத்தார். அவரது வழியில் வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வியில் இன்னும் முன்னேற்றமடைய உயர்கல்வியை பெண்கள் பெற புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40-க்கு நாற்பதையும் நமதாக்க வேண்டும். இது பேச்சிற்கான நேரம் இல்லை, செயலாற்றும் நேரம். எனவே செயல்படுவோம்” என்றார்.