மருத்துவமனையில் பெண் குத்திக்கொலை – கேரளாவில் பயங்கரம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவட்டுபுலா பகுதியை சேர்ந்த பெண் சிம்னா சகீர் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒருகடையில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, சிம்னா சகீரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக முவட்டுபுலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தந்தையை பார்ப்பதற்காக சிம்னா இன்று மாலை 3 மணியளவில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்த ஷாகுல் அலி (வயது 37) என்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிம்னா சகீரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிம்னா சகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தாக்குதல் நடத்திய ஷாகுல் அலி தன்னைத்தானே கத்தியால் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிம்னாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லேசான காயங்களுடன் இருந்த ஷாகுல் அலியை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷாகுல் அலியும், சிம்னாவும் நன்கு பழகிவந்ததும், காதல் விவகாரத்தில் இந்த கொலை அரங்கேறியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சிம்னா சகீர் வேலை செய்த கடைக்கு சென்ற ஷாகுல் அங்கு சிம்னாவிடம் பிரச்சினை செய்துள்ளார். இதுதொடர்பாக ஷாகுல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த கொலைக்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.