சிலபல மாதங்களாக கள்ளக்குறிச்சியிலேயே வியாபார நிமித்தம் தங்கிவிட்டேன். சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பிய நான், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கியபோது கண்களில் பளிச்சிட்டது ஒரு விளம்பரம். அது, ஆனந்த விகடன் வழங்கும் நம்பிக்கை விருது நிகழ்ச்சியின் அழைப்பு.
பொதுவாக, விருது என்றாலே சினிமா சம்பந்தமான நிகழ்வாகத்தானே இருக்கும்? விகடன் யாருக்குதான் விருது வழங்குகிறார்கள் என பார்க்க ஆவல் உருவானது. மார்ச் 29, வெள்ளிக்கிழமை மாலைதான் நிகழ்ச்சி. குறித்த நேரத்துக்கு சென்னை, வாலாஜா சாலையிலிருக்கும் கலைவாணர் அரங்கத்துக்குச் சென்றேன்.
துவக்க நிகழ்வுகளாக கிராமப்புற கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. அப்பப்பா… அந்தக் கலைஞர்களுக்குத்தான் எத்தனை எனர்ஜி. கடைசி மணித்துளி வரை குறையவே இல்லை அந்த எனர்ஜி. அடுத்தடுத்து கண்கள் குளமாகப் போகின்றன என்கிற விவரம் தெரியாமல், உற்சாகத்தின் உச்சியில் அமர்ந்திருந்தேன், நாட்டுப்புற கலைகளை ரசித்தபடி.
விருது வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பமாயின. அடுத்ததொரு விருதினை வழங்க தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காத்திருக்க… மேடையேறினார், மதுரையைச் சேர்ந்த வடக வியாபாரி முதியவர் ராஜேந்திரன்.
அவரைப் பற்றிய காணொலி… கூட்டத்தையே கட்டிப்போட்டது. தான் உண்டு… தன் குடும்பம் உண்டு என தான் சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு தன் சந்ததிகளுக்குச் சொத்து சேர்க்கும் சராசரிகள்தான் இங்கே 99%. அவர்களுக்கு மத்தியில், தனது வருமானத்தில் பல கோடிகளை அரசுப் பள்ளிக் கூடங்களுக்கு வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கும் மாபெரும் மனதுக்குச் சொந்தக்காரர் அந்த மாமனிதர் ராஜேந்திரன்.
அரசு பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல், ஆண்டாண்டு காலமாக தாராளமாக ராஜேந்திரன் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் செய்தி, வெளியில் தெரியாமலேதான் இருந்தது. மதுரை, மாநகராட்சி அதிகாரியொருவர் இந்த செயற்கரிய செயலைப் போற்றிப் பதிவிட்ட பிறகுதான், ஊருக்கும் உலகுக்கும் தெரியவந்தது.
அதெப்படி இவ்வளவு காலமாக வெளியில் தெரியாமல் இருந்தது?
மேடையிலேயே பதில் தந்தார் பெரியவர்- ”இந்தக் கை கொடுக்கறது, அந்தக் கைக்குத் தெரியக்கூடாதுங்க.’’
வழக்கமாக பலரும் சொல்லும் பதில்தான். ஆனால், உண்மையிலேயே அந்தக் கைக்குகூட தெரியாமல்தான் இருந்திருக்கின்றன அவருடைய அளப்பரிய கொடைகள். அதற்கு அவர் சொன்ன விளக்கம்-
”நான் 5ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியல. ஆனா, மத்தவங்க படிச்சி முன்னேறட்டும்னுதான் இதை செஞ்சிக்கிட்டிருக்கேன். இதனால, நான் ஒண்ணும் குறைஞ்சிடமாட்டேன். கேணி இறைக்க இறைக்கத்தான் ஊத்தெடுத்துக்கிட்டே இருக்கும்.’’
”ஆரம்பத்துல நடந்துபோயி விற்க ஆரம்பிச்சது, சைக்கிள், பைக், கார், வேன், லாரி, கண்டெயினர், ஃப்ளைட்டுனு ராஜேந்திரன் கடை சரக்கு தரமா இருக்கும்ப்பான்னு வரிசை கட்டி வந்து நின்னவங்க கொடுத்தது இது. அதத்தான் அள்ளி பள்ளிக்கூட குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்” என்று தன்னடக்கத்தோடு பெரியவர் சொன்னபோது… கோடி கோடிகளாகக் குவித்தும், எச்சில் கையால்கூட காக்கா ஓட்டாத பலரும் நினைவுக்கு வந்துபோனார்கள். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம்தான் இங்கே பட்டங்களை வாரி வழங்கி பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தபோது, அருவெறுப்பாகவே இருந்தது.
”இவர் என் தொகுதிக்காரர். அங்கே இவருடைய சேவைகளுக்கு அளவில்லை. என் தொகுதிக்கும் நிறைய செய்திருக்கிறார். அதற்காகவே இவருக்கு விருது கொடுக்க தேர்தல் வேலைக்கு நடுவேயும் சென்னைக்கு ஓடிவந்தேன்…’’ என்று தனக்கும் ராஜேந்திரனுக்குமான தொடர்பை அமைச்சர் அறிவித்தது அருமை.
நெகிழ்ச்சியின் உச்சியில் இருந்த என்னை… கண்ணீரில் மூழ்கடித்தது மற்றொரு விருது. இதை விருது என்று சொல்லமுடியாது. ஆம், இதற்கான விளக்கத்தையே மேடையிலேயே கொடுத்தார், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
இந்தக் கண்ணீருக்கு 31 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. வாச்சாத்தி கொடுமை பற்றி லேசாகப் படித்திருக்கிறேனே தவிர, கொடுமையின் முழு ஆழம்பற்றி அறிந்திருக்கவில்லை, இதற்கு முன் தர்மபுரி மாவட்ட வனக்கிராமமான வாச்சாத்திக்குள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் நுழைந்த நூற்றுக்கணக்கான காவலர்கள், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், அங்கே நடத்திய அக்கிரமம்… வரலாற்றில் அதற்கு முன் நடந்திராத ஒன்று.
ஒரு சின்னஞ்சிறுமி உள்பட 18 பெண்களை விசாரணைக்காக என்று சொல்லி தனியே அழைத்துச் சென்று… பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதோடு மட்டுமல்லாமல்… அவர்கள் மீது வனக்கொள்ளை என்று வழக்குப்பதிந்து மூன்று மாதங்கள் சிறையில் வேறு அடைத்தனர். மாற்றிக் கொள்ள துணிகூட கொடுக்காமல், சரியான உணவில்லாமல், உறக்கம் இல்லாமல் மூன்று மாதங்களாக அவர்கள் அனுபவித்த கொடுமை… எதிரிக்கும்கூட வந்துவிடக்கூடாத கொடுமை.
அந்தப் பெண்கள் துணிந்து களமிறங்கி புகார் கொடுக்க… மூன்று ஆண்டுகளாக எஃப்.ஐ.ஆர் கூட போடாமல் பயம்காட்டிய அரச பயங்கரவாதத்தை அன்றைக்குத்தான் முழுக்க முழுக்க மேடையில் கேள்விப்பட்டேன்… அதிர்ந்தேன். அன்று… அக்கொடுமையின்போது அப்பெண்களைச் சூழ்ந்த இருள், என்னையும் சூழ்ந்தது இன்று!
பல்வேறு தடைகளைத் தாண்டி பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் நீதி வென்று கொடுத்த மலைவாழ் மக்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் சண்முகத்துடன் அந்தப் பெண்களும் மேடையேற… ஒட்டுமொத்த அரங்கமும் தன்னெழுச்சியாக எழுந்து நின்றது-புல்லரிக்கும் நிகழ்வு.
மேடையில், அப்பெண்களில் சிலர் அந்நாள் நிகழ்வை விவரித்தபோது, கசியாத கண்களே இல்லை.
‘பெண்களின் பெயரைச் சொல்ல வேண்டாம்’ என ஒரு சாரார் சொல்ல… விருதினை வழங்குவதற்காக தோழர் நல்லக்கண்ணு மற்றும் திருமாவளவன் ஆகியோருடன் மேடையிலிருந்த நீதியரசர் சந்துரு, ‘பெயரைச் சொல்லுங்கள்’ என்று சொன்னது சிறப்பு.
”பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் வரக்கூடாது… பெயர்கள் வெளியிடக்கூடாது.. என்கிற மரபுகளைத் தாண்டி, இங்கே இவர்கள் மேடையேற்றப்பட்டிருப்பது… விருதுக்காக அல்ல. ஆண்டுகள் பலவானாலும் மறக்க முடியாத கொடுமைக்கு எதிராக துணிந்துநின்று நீதியை வென்றெடுத்த பெண்களின் வீரம் போற்றப்பட வேண்டும்… மற்றவர்களுக்குக் கடத்தப்பட வேண்டும்… துணிச்சலை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று திருமாவளவன் சொன்னபோது எழுந்த கைத்தட்டல்கள் அடங்கவே இல்லை…. என் கண்களில் நீர் கசிவதும் நிற்கவே இல்லை. நேரடி வீடியோ காட்சிகள் பக்கவாட்டுத் திரைகளில் ஓடிக் கொண்டிருக்க… விருதுக்காக காத்திருந்தவர்கள், வழங்குவதற்காக வந்திருந்த விஐபி-க்கள் என அனைவரின் கண்களும் கசிந்தபடி இருந்த காட்சிகள் விரிந்தன.
அடுத்து, என் நெஞ்சை விட்டு அகலாத மற்றுமொரு விருது.
அவர், அரசு மருத்துவர். பெரும்பாலும், எத்தனை கார்கள், எத்தனை வீடுகள், எத்தனை நாடுகள் என்றே கணக்குப் போடும் மருத்துவர்களைத்தான் அதிகம் நாமறிவோம். இவரோ… சேவை செய்வதற்காகவே அரசு மருத்துவர் பதவியைத் துறந்தவர்.
ஹெச்ஐவி எனும் கொடிய நோய் 80. 90 -களில் பரவ ஆரம்பித்த காலம்.. உலகமே நடுநடுங்கியது. பத்திரிகைகளில் அந்தச் செய்திகளைப் படிக்கும்போதே நடுங்க ஆரம்பித்துவிடும். நடுங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. அத்தகைய காலகட்டத்தில்… ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஊர் மட்டுமல்ல… உறவுகளே ஒதுக்கிவிரட்டின. பெற்றோர்கள் ஹெச்ஐவி தொற்றால் மரணமடைய… பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறிப்போனார்கள்.
இந்தக் கொடுஞ்சூழலின் ஆரம்பக்கட்டத்தில் இப்படி ஆதரவற்றுப்போன இரு குழந்தைகளுக்காக அரசு மருத்துவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஹெச்ஐவி நோயாளிகளுக்காகவும்… அவர்களுடைய குழந்தைகளுக்காகவும் சேவையாற்ற ஆரம்பித்தவர்தான் இந்த மருத்துவர்.
அந்தக் குழந்தைகளுக்காக திருவள்ளூர் பகுதியில் தனியாக ஓர் இல்லத்தை உருவாக்கி, அங்கே தங்க வைத்து தொடர்ந்து சிகிச்சையளித்தார். பள்ளிக்கூடம், கல்லூரி என அவர்களையெல்லாம் படிக்கவும் வைத்தார்.
அவர்களில் பலர், இன்றைக்கு சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், வீடியோ பதிவாக பேசியது மேடையில் ஒளிபரப்பட்டது. வார்த்தைக்கு வார்த்தை அம்மா… அம்மா என்று அவர் உருகியது, மெய்சிலிர்க்க வைத்தது.
அந்த அம்மா… டாக்டர் மனோரமா. நூற்றுக்கு நூறு நம்பிக்கை விருதுக்குத் தகுதியான அந்த அம்மா, வயது காரணமாக வீல் சேரில்தான் மேடையேறினார்.
”நான் பெற்றது ஒரு மகன். ஆனால், வளர்த்த மகன், மகள்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நான்தான் அம்மா. பெற்றால்தான் பிள்ளையா?” எனச் சொல்லி எல்லோர் நெஞ்சிலும் அதிர்வலைகளை உருவாக்கினார் மனோரமா.
”ஹெச்ஐவி பாசிட்டிவ் பெண் ஒருவருக்கு எங்கள் கண்காணிப்பில் பிரசவம் நடந்தது. பிறந்த குழந்தைக்கும் ஹெச்ஐவி தொற்று இருந்தது. தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்தோம். சில மாதங்களில் குழந்தைக்கு நெகடிவ் ரிசல்ட்” என்று முகம் முழுக்க பிரகாசத்துடன் சொன்ன மனோரமாவின் முகத்தில், எனக்குத் தோன்றியது அன்னை தெரசாவின் முகம்.
இத்தனைக்கும் சென்னை கோடம்பாக்கத்தில் நாங்கள் வைத்திருந்த சூப்பர் மார்க்கெட்டில் அவர் பல வருட வாடிக்கையாளர். ஆனால், அவருடைய தொண்டுள்ளத்தை இத்தனை நாள்களாக நாம் அறிந்திருக்கவில்லையே என்று நினைத்தபோது, மிகவும் வருத்தமாகவே இருந்தது!
பட்டிமன்ற வித்தகர் சாலமன் பாப்பையாவுக்கு பெருந்தமிழர் விருது உள்பட மொத்தம் 21 விருதுகளை வழங்கிய விகடன், வந்திருந்த அனைவருக்கும் விருந்தையும் கொடுத்தது.
‘நூற்றுக்கு நூறு பொருத்தமானவர்களை தேடிக் கண்டுபிடித்த விகடன் குழுவினருக்கு விருது வழங்கவேண்டும்’ என்றபடியே வீடுபோய்ச் சேர்ந்தேன். அப்போது மணி இரவு 12.00.
– ஏ.ஏ.சத்தார், சென்னை-24