Doctor Vikatan: நீரிழிவு உள்ளோர், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோர் ஆகியோர் பலாப்பழம் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் படுகிறார்கள். இதே அறிவுரை, பலாக் கொட்டைக்கும் பொருந்துமா? அவர்கள் பலாக்கொட்டைகள் சாப்பிடலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்
பலாப்பழத்தில் உள்ள அனைத்து நல்ல தன்மைகளும் பலாக்கொட்டைக்கும் உண்டு. குறிப்பாக, குடல் ஆரோக்கியத்துக்கு பலாக்கொட்டை மிகவும் நல்லது.
பலாக்கொட்டையிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனாலும், உருளைக்கிழங்கோடு ஒப்பிடுகையில், இது ஆரோக்கியமானதுதான். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து கிடையாது. பலாக்கொட்டையில் நார்ச்சத்து அதிகம். அதனால், இது மறைமுகமாக எடைக்குறைப்புக்கும் உதவக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இதிலுள்ள தையாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகிய பி வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து, உடலியக்கங்கள் சீராக நடைபெற உதவக்கூடியவை. ஆன்டிமைக்ரோபியல் தன்மை கொண்டதால், இவை, பாக்டீரியா கிருமித் தொற்றிலிருந்தும் உடலைப் பாதுகாக்கக்கூடியவை.
புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் பலாக்கொட்டையில் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதாகவும் ஆய்வுத் தகவல்கள் உள்ளன.
பொதுவாக, வெயிட்லாஸ் செய்ய நினைப்போருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவோம். அந்த உணவுகள் கிளைசெமிக் இண்டெக்ஸை (Glycemic index) அதிகரிக்கக் கூடியவை. அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதே கிளைசெமிக் இண்டெக்ஸ். எனவே, மாவுச்சத்துள்ள மற்ற உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டவர்கள் கூட, பலாக்கொட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம். அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. தவிர, சுவையும் நன்றாக இருக்கும்.
வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைப் போல, வாய்வுப் பிரச்னையையும் ஏற்படுத்தாது என்பதால், பலாக்கொட்டையை எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.