மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சொர்க்க பூமி என அறியப்பட்ட இந்த மைதானத்தில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் சேஸிங் செய்யலாம் என்ற முடிவில் அவர் சேஸிங்கை எடுத்தார். முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணியும் அதிரடியாக ஆடி 240 ரன்களுக்கு மேல் எடுத்ததால், சேஸிங்கில் அந்த அணி எப்படி அடித்துவிடும் என்பதையும் சஞ்சு சாம்சன் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தார்.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டிரெண்ட் போல்ட் முதல் ஓவர் பந்துவீசியதும் சிக்சர் மழை என்ற கனவெல்லாம் கனவாகவே போனது. அவர் வீசிய பந்துகள் எல்லாம் தீப்பொறி ரகமாக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை நோகடித்தது. இஷான் கிஷன் தட்டுதடுமாறி மூன்று பந்துகளுக்கு பிறகு ஒரு ரன் எடுக்க, ரோகித் சர்மா ஸ்டிரைக் சென்றார். அவர் எப்படி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் முதல் பந்திலேயே கேட்ச் என்ற முறையில் அவுட்டாகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் சூப்பராக விக்கெட் கீப்பில் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்த பால் ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன், சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபள்யூ ஆகி வெளியேறினார்.
முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் அடுத்த சில பந்துகளில் டெவால்ட் ப்ரீவிஸ் கேட்ச் என்ற முறையில் டிரெண்ட் போல்ட் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் கொஞ்சம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார் இஷான் கிஷன். ஒரு சிக்சர் 2 பவுண்டரி அடித்த அவருக்கு ஒரு அதிர்ஷடம் அடித்தது. நன்ரே பர்க்கர் வீசிய இரண்டாவது ஓவரில் எல்டபள்யூ ஆனார். அதனை ராஜஸ்தான் கேப்டன் ரிவ்யூ எடுத்திருந்தால் அவுட்டாகியிருப்பார். ஆனால் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்லும் என நினைத்து சாம்சன் எடுக்கவில்லை. ரிப்ளேவில் அது சூப்பரான அவுட் என தெரிந்தது.
இருப்பினும் இஷான் கிஷன் நீண்ட நேரம் எல்லாம் நீடிக்கவில்லை. மீண்டும் ராஜஸ்தான் அணியின் நான்காவது ஓவரை வீச வந்த நன்ரே பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக ஆடினர். வான்கடே பிட்சை பொறுத்தவரையில் இன்று வேகப்பந்து, சுழற்பந்துவீச்சு என இரண்டுக்குமே சாதகமாக இருந்தது. இதானலேயே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.