இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் 2023-2024 ஆம் நிதியாண்டில் மொத்தத்தில் 3,28,785 யூனிட்களை விற்பனை செய்து, 115% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2022-2023 நிதியாண்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 1,52,741 ஆக பதிவு செய்திருந்தது.
மேலும் கடந்த மார்ச் 2024 மாத விற்பனையில் முதன்முறையாக 53,000 விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது. அதிகப்படியான வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் தற்பொழுது ஓலா S1X, S1X+, ஓலா S1 ஏர், மற்றும் டாப் மாடல் S1 Pro உள்ளது.
ஏப்ரல் 1 முதல் புதிய மானியம் அறிவிக்கப்பட்டுள்ளதால் எலக்ட்ரிக் டூ வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் டூ வீலர்களுக்கு இனி மானியம் ரூ.10,000 மட்டும் கிடைக்கும் என்பதனால், மானியம் பெற்று வருகின்ற ஸ்கூட்டர்களின் விலை ரூ.10-12,000 வரை அதிகரிக்கின்றது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மின்சார இருசக்கர வாகன சந்தையில் FY23-24ல் சுமார் 9.40 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஓலா முதலிடத்தில் (3.28 லட்சம் யூனிட்டுகள்) உள்ள நிலையில், இரண்டாமிடத்தில் டிவிஎஸ் (1.82 லட்சம் யூனிட்டுகள்) மற்றும் மூன்றாவது இடத்தில் ஏதெர் எனர்ஜி (1.08 லட்சம் யூனிட்டுகள்) , மற்றும் பஜாஜ் ஆட்டோ (1.04 லட்சம் யூனிட்டுகள்) உள்ளது.