சிவகார்த்திகேயனின் `எஸ்.கே.23.’ படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. காரணம், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து சல்மான் கானை இயக்குகிறார். அதைப் போல சிவாவுக்கும் `அமரன்’ படத்தின் இரண்டு வாரப் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. இப்படி இருவருக்கும் கமிட்மென்ட்கள் அடுத்தடுத்து இருப்பதால், `எஸ்.கே.23′ படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் சீறிக்கொண்டிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே.23’. இந்தப் படத்தில் கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ’ படத்தின் நாயகி ருக்மிணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மலையாளத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் இளமன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னையில் சிம்பிளாகத் தொடங்கிய இதன் பூஜையை தொடர்ந்து படப்பிடிப்பும் அங்கேயே நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரி சென்றனர்.
சிவா நடித்து வரும் ‘அமரன்’ படம், மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பது தெரியும். ஆக்ஷனுக்கு முக்கியத்துவமான படமாக இது ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் சிவா நடித்துள்ளார். மேஜர் ரோலுக்காகவே தன் உடல் எடையை கூட்டி, உடம்பையும் கட்டுக்கோப்பாக்கி வைத்தார். அவரது ஜிம் ஒர்க்அவுட் வீண் போகவில்லை. ‘எஸ்.கே.23’ படம் ‘அமர’னை விட ஆக்ஷன் அதிகம் உள்ள படம் என்பதால், படப்பிடிப்புக்கு இடையேயும் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அப்படி ஒரு கட்டுறுதியான உடம்பும், மிடுக்கான தோற்றமும் வேண்டும் என்பதற்காக ஜிம் டிரெய்னர் சந்தீப்புடன் கைகோத்துள்ளார் சிவா. சிம்புவை ‘வெந்து தணிந்தது காடு’ கதாபாத்திரத்திற்காக ஸ்லிம் ஆக்கிய பயிற்சியாளர் இவர். அவரது வழிகாட்டுதலில் ஆக்ஷன் நாயகனாக ரெடியாகிவிட்டார் சிவா. பாண்டிச்சேரி படப்பிடிப்பில் பாடல் உட்படப் சில சீன்களை ஷூட் செய்தவர்கள், இப்போது சென்னையில் ஆக்ஷன் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். ‘துப்பாக்கி’ படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வால் மீண்டும் முருகதாஸுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கும் சிவாவுக்குமான ஸ்டன்ட் காட்சிகளுக்கான ஷூட்டிங் இப்போது சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
வரும் ஜூன் மாதத்திற்குள் இந்தப் படப்பிடிப்பை முடித்தால்தான் அடுத்து சல்மான் கானை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் தயாராக முடியும். அதைப் புரிந்து கொண்டு சிவாவும் படப்பிடிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.