சென்னை: அமெரிக்காவில் தாய், தந்தை இறந்ததால் முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, பாட்டியும், சித்தியும் தமிழக அரசு உள்ளிட்ட பலரின் உதவியுடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பிரவீன்குமார், திருச்சி மாவட்டம் தமிழ்ச்செல்வி தம்பதி, அமெரிக்காவில் மிசிசிப்பி மாநிலத்தில் வசித்து வந்தனர். பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்காவில் அவர்களுக்கு பிறந்த விஷ்ருத் என்கிற குழந்தையை, அந்நாட்டு குழந்தை பாதுகாப்பு சேவைகள் (சிபிஎஸ்) தங்களுடைய பாதுகாப்பில் எடுத்து கவனித்து வந்தனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர், இறந்த இருவரின் பெற்றோரிடமும் பவர் ஆப் அட்டர்னி பெற்று, இருவரின் உடல்களையும் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். அதே பவர் ஆப் அட்டர்னியை முறைகேடாக பயன்படுத்தி, குழந்தையை அங்கேயே ஒருவருக்கு தத்துக் கொடுத்துள்ளனர்.
குழந்தையின் பாட்டி சாவித்திரி, சித்தி அபிநயா அமெரிக்கா சென்று குழந்தையை மீட்க நீதிமன்ற உதவியை நாடினர். அவர்களுக்கு தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியம், இந்திய தூதரகம், அங்கு வசிக்கும் கோவையை சேர்ந்த மருத்துவர் குடும்பம், தமிழ்ச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளை செய்து வந்தன.
பெற்றோர் இறந்த பிறகு குழந்தையை அவர்களின் குடும்பத்தினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் இருந்தாலும், குழந்தையை தத்து எடுத்தவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இந்த விவகாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படி, 2023-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியத்தின் தலைவராக இருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழ்ச் சங்கங்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை நடத்திய அவர், குழந்தை அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தாலும், பெற்றோர் இறந்துவிட்டதால், குழந்தையை பாட்டியும், சித்தியும் கேட்கின்றனர்.
குழந்தையின் பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்று மிசிசிப்பி மாநிலத்தின் ஆளுநர் மற்றும் தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் கொடுத்தார். அதேபோல், தமிழகத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழு மூலம் ஆய்வு செய்து இந்த குடும்பத்திடம் குழந்தையை ஒப்படைக்கலாம் என்று கொடுத்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி தந்து எடுத்தவர்களுடனும், பாட்டி – சித்தியுடனும் குழந்தை மாறி மாறி இருந்து வந்தது. பாட்டி மற்றும் சித்தியுடன் இருக்கும்போதுதான் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை நீதிமன்றம் புரிந்து கொண்டது. தத்து எடுத்தவர்களிடம் பேசி புரிய வைக்கப்பட்டது. இறுதியில் குழந்தையை பாட்டி மற்றும் சித்தியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, அமெரிக்க குடியுரிமை பெற்ற மூன்று வயது குழந்தை விஷ்ருத், பாட்டி மற்றும் சித்தியுடன் நேற்று இரவு சென்னை வந்தான். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர் வரவேற்றனர். குழந்தையை சென்னையிலேயே வளர்க்க பாட்டியும், சித்தியும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.