சேலம்: “அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பை மறைக்க கச்சத்தீவு நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது” என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் மோடி தேர்தலுக்காக அரசியல் நாடகம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டாக தாங்கள் செய்த ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தாமல், கச்சத்தீவை முன்வைத்து அரசியல் செய்து நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தண்ணீர் இல்லாத மணல் திட்டால் சூழப்பட்ட ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியான 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுத்துவிட்டு, அதற்கு பதில் கடல் மார்க்கமாக 25 லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியா எடுத்துக் கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திர நடவடிக்கையாகும். நாட்டின் நலனை பாதுகாக்கவும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதிலும் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதை சொல்லவும் அவர்களுக்கு மனம் இல்லை.
அதை விட்டுவிட்டு ராஜதந்திரமாக யாருக்கும் பயனில்லாத கச்சத்தீவை கொடுத்துவிட்டு, அதற்கு பதில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தை இலங்கையிடம் பெற்ற மறைந்த தலைவரின் பெயருக்கு புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவகையில் பிரதமர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கச்சத்தீவு பொருத்தமட்டில் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த கருத்தை மத்திய அரசும் மக்களவையில் வலியுறுத்தியுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு எதுவும் இதுவரை செய்யவில்லை. ஆனால், தற்போது தேர்தல் சமயம் என்பதால் மக்களை திசை திருப்ப இதுபோன்ற நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகுிறது.
அருணாச்சல பிரதேசத்தில் சீன நாட்டின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து எடுத்து, சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தற்போது கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். இது தேர்தலுக்காக போடப்பட்ட நாடகம்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சியோடு விவாதம் நடத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தயாரா என்பதை கூறட்டும். வரும் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கூறினார்.