மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
ரிசர்வ் வங்கி இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 80-வது நிறுவன நாள் விழாவில் நான் பங்கேற்றேன். அப்போது, வங்கித் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக வங்கிகளின் வசூலாகாத கடன்கள் (என்பிஏ) அதிக அளவில் இருந்தது.இதனால் வங்கித் துறையின் எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மை கேள்விக்குறியாக இருந்தது.
இதையடுத்து, பாஜக தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்தியஅரசு ரூ.3.5 லட்சம் கோடியை வங்கித் துறைக்கு ஒதுக்கியதுடன் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இதன் காரணமாக இப்போது இந்திய வங்கித் துறை மிகவும் வலுவான நிலையை எட்டிஉள்ளது. குறிப்பாக, கடந்த 2018-ல்11.25% ஆக இருந்த வங்கிகளின் என்பிஏ, கடந்த ஆண்டு நிலவரப்படி 3% ஆகக் குறைந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை தற்சார்பு கொண்டதாக மாற்ற வேண்டும்.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக உள்ளது.கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் இந்தியப் பொருளாதாரம் விரைவாக வீழ்ச்சியிலிருந்து மீண்டதுடன் புதிய சாதனைபடைத்து வருகிறது. இந்தவளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமாக அமைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும் உலக நாடுகளுக்கு மிகவும் சவாலாக உள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி ஒரு சிறந்த மாதிரியை உருவாக்க வேண்டும். அது உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
உலகில் மிகவும் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அந்த வகையில், இந்திய இளைஞர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் ரிசர்வ் வங்கிக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.