“உதிரிப்பூக்கள்” தந்து ரசிகர்கள் 'நெஞ்சத்தைக் கிள்ளிய' இயக்குநர் மகேந்திரன்
காலம் கடந்தும் பேசப்படும் காளி, வள்ளி, மங்கா, குமரன் என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, “முள்ளும் மலரும்” என்ற காவிய கலைப் படைப்பை தந்து, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஆற்றல் மிகு இயக்குநர் மகேந்திரனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
* சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பின் இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்தார்.
* “இனமுழக்கம்” என்ற பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதும் பணி செய்து வந்த இவர், 1966ஆம் ஆண்டு வெளியான “நாம் மூவர்” என்ற திரைப்படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்து, ஒரு தரமான கதாசிரியராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.
* தொடர்ந்து வந்த “சபாஷ் தம்பி”, “பணக்காரப் பிள்ளை”, “நிறைகுடம்”, “திருடி”, “தங்கப்பதக்கம்”, “ஆடு புலி ஆட்டம்” போன்ற திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி வெற்றியும் கண்டார்.
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத திரைக்காவியமான “முள்ளும் மலரும்” என்ற திரை ஓவியம் தந்து, படைப்பாளி என்ற பரிணாமம் பெற்றார் இயக்குநர் மகேந்திரன்.
* மனவலியைக் கூட தனது கேமராவின் ஒளி மொழியால் சொல்லத் தெரிந்த ஒளி ஓவியன் பாலுமகேந்திரா என்ற அபூர்வ திரைமேதையை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவரும் மகேந்திரனே.
* இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்ட இவர், எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “சிற்றன்னை” என்ற குருநாவலுக்கு, தெளிவான திரைக்கதை எழுதி, தனது வலுவான படைப்பாற்றலைக் கொண்டு “உதிரிப்பூக்கள்” ஆக்கி உலக சினிமா தரத்தின் உச்சம் தொட்டார்.
* கன்னட நடிகை அஸ்வினி, நடிகர் சாருஹாசன், பேபி அஞ்சு, ஆகியோரை “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் மூலமும், நடிகை சுஹாசினியை “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்தின் மூலமும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவருக்குண்டு.
* அசோக்குமார் என்ற ஆகச்சிறந்த ஒளிப்பதிவாளரையும் தனது “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து “பூட்டாத பூட்டுக்கள்”, “ஜானி”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே”, “நண்டு”, “மெட்டி”, “அழகிய கண்ணே”, “கை கொடுக்கும் கை” என இவர் இயக்கிய 12 திரைப்படங்களில் ஏறக்குறைய 9 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியும் வாய்ப்பினையும் அவருக்கு தந்து சிறப்பித்திருக்கின்றார் இயக்குநர் மகேந்திரன்.
* கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பயணித்து வந்த இயக்குநர் மகேந்திரன், “காமராஜ்”, “தெறி”, “நிமிர்”, “மிஸ்டர் சந்திரமௌலி”, “சீதக்காதி”, “பேட்ட”, “பூமராங்” என ஒருசில திரைப்படங்களில் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
* சிறந்த திரைப்படங்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை இவரது “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்” வென்றெடுக்க, இவருடைய “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படம் மட்டும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது.
* யதார்த்த பாணி சினிமாக்களை தந்து, கலையுலகம் என்ற பெட்டகத்தில் நிலையான இடம் பிடித்து நீடித்த புகழோடு விளங்கும் இயக்குநர் மகேந்திரனின் கலைப்படைப்புகள் அனைத்தும் என்றென்றும் அவர் புகழ் பாடும் என கூறி, அவருடைய நினைவு நாளில் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நெஞ்சம் நிறைவு கொள்வோம்.