ஏமாற்றிய 'ரெபல்' : காப்பாற்றுவாரா 'கள்வன்'?
இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இந்த ஆண்டில் அவரது இசையில் “கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, சைரன், ரெபல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அவர் நாயகனாக நடித்த 'ரெபல்' படம் மார்ச் 22ல் வெளியானது. அடுத்து இந்த வாரம் மார்ச் 4ம் தேதி 'கள்வன்' படமும், மார்ச் 12ம் தேதி 'டியர்' படமும் வெளியாக உள்ளது.
'ரெபல்' படம் வெளியீட்டிற்கு முன்பு ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளிவந்த பின் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ரசிகர்கள் அந்தப் படத்தை வரவேற்கவில்லை. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய வேளையில் மலையாளிகளைப் பற்றிய ஒரு தவறான படமாக அப்படம் அமைந்தது வரவேற்பின்மைக்குக் காரணமாக அமைந்தது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'கள்வன்' பட டிரைலர் 25 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. காடு, யானை என வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'லவ் டுடே' இவானா, கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா, தீனா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். பிவி சங்கர் இயக்கத்தில் பாடல்களுக்கு மட்டும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ரெவா அமைத்துள்ளார். 'ரெபல்' படம் ஏமாற்றிய நிலையில் இந்த 'கள்வன்' ஜிவியைக் காப்பாற்றுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.