BCCI, IPL 2024 Schedule: தற்போது 2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 14 லீக் போட்டி முடிந்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு 15வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2024 சீசனின் இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடருக்கான போட்டி அட்டவணையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையேயான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு, ஒருநாள் முன்பாக ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், முதலில் ஐபிஎல் 2024 தொடருக்கான 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டது. அதன்பிறகு மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகே, மீதமுள்ள 53 போட்டிகளுக்கான முழு அட்டவணையையும் வெளியிடப்பட்டது.
2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இறுதி அட்டவணையை உறுதிசெய்த எட்டு நாட்களுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடப்பு சீசனுக்கான அட்டவணையில் மேலும் ஒரு மாற்றத்தை செய்துள்ளது.
இரண்டு போட்டிகளின் தேதியில் மாற்றம்
வரவிருக்கும் பண்டிகையை காரணமாக இரண்டு போட்டிகளின் அட்டவணை மாற்றிய அமைக்கப்பட்டு உள்ளன. ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடக்கவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையே நடைபெறும் போட்டி, குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகள் இடையே நடைபெறும் போட்டியின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ராம நவமி காரணமாக நிகழ்ச்சி மாற்றப்பட்டது
கொல்கத்தாவில் ஏப்ரல் 17 அன்று, ராம் நவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் திருவிழாக்கள் காரணமாக, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டிக்கு போதிய பாதுகாப்பை வழங்குவது பெரும் சிக்கலாக இருக்கும் என கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு போட்டிக்கான அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போட்டி தேதி மாற்றம்
ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டி ஏப்ரல் 17 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்தது. இருப்பினும், இப்போட்டி ஏப்ரல் 16 அன்று அதே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மற்றும் டெல்லி போட்டி தேதி மாற்றம்
அதேபோல அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் மற்றும் டெல்லி இடையே ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி, ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.