பணமதிப்பிழப்பு நடவடிக்கையையோ, ஜி.எஸ்.டி-யையோ, ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்த்தது உள்ளிட்ட தனியார்மய நடவடிக்கைகளையோ கடந்த பத்தாண்டுகால மோடி அரசின் சாதனைகள் என்று பா.ஜ.க-வினர் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க அரசின் சாதனைகள் என்று அண்ணாலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எவரும் ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை.
தற்போது, பா.ஜ.க-வுக்கு எதிராக தேர்தல் பத்திரங்கள் திட்டம் உள்பட ஏராளமான பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்த நிலையில், தனக்கு எதிரான பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக புதிய புதிய பிரச்னைகளை பா.ஜ.க கிளப்பிவருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதில் ஒன்றுதான் கச்சத்தீவு விவகாரம்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுத்தது. கச்சத்தீவுக்கு மாற்றாக, வாட்ஜ் பேங்க் என்ற கடல் பகுதியை இலங்கையிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. ஆனாலும், கட்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துவருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து ஆர்.டி.ஐ மூலமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெற்றிருக்கிறார்.
‘1961-ம் ஆண்டு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டுத்தர தயார்’ என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கொழும்பு நகரில் 1973-ம் ஆண்டு நடைபெற்ற வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் கூறப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கச்சீத்தீவை காங்கிரஸ் அரசு அலட்சியத்துடன் தாரைவார்த்தது அம்பலமாகியிருக்கிறது என்று இந்த ஆர்.டி.ஐ தகவல்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால், தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படும் பிரச்னையாக மாறியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸையும், தி.மு.க-வையும் குறிவைத்த பா.ஜ.க-வினர் விமர்சித்த நிலையில், பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுப்பதற்காக சீன விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்திருக்கிறது. இதனால், கச்சத்தீவு விவகாரம் பா.ஜ.க-வுக்கு பேக்ஃபயர் ஆகியிருக்கிறது. ஏற்கெனவே, மோடி ஆட்சிக்காலத்தில், எல்லைப்பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளுடனான பிரச்னையில், அதிரடி காட்டும் பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும், சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.
கச்சத்தீவு விவகாரத்தை அண்ணாமலையும், மோடியும் எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள 30 இடங்களுக்கு சீனா அவர்கள் மொழியில் பெயர்சூட்டியிருக்கிறது. முதன்முறையாக, 2017-ம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள ஆறு இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கும், 2023-ம் ஆண்டு 13 இடங்களுக்கும் புதிய பெயர்களைச் சூட்டிய சீனா, தற்போது 30 இடங்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தை கபளீகரம் செய்ய சீனா மேற்கொள்ளும் முயற்சிக்கு உரிய முறையில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்காவும், ஜெர்மனியும் கருத்து தெரிவித்ததற்கு, ‘உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள்’ என்று கண்சிவந்த இந்தியா, ஜெர்மனி தூதரை வரவழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
ஒரு கருத்து சொன்னதற்காக இவ்வளவு கோபப்பட்ட மத்திய பா.ஜ.க அரசு, நம் நாட்டை ஆக்கிரமிக்க முயலும் சீனாவுக்கு எதிராக ஏன் கொந்தளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ‘இந்திய நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடும் நேரத்தில், கச்சத்தீவு குறித்து பொய்க்கதைகளைக் கட்டவிழ்த்து தன்னை தற்காத்துக்கொள்ள பிரதமர் மோடி முயல்கிறார். எல்லைப் பிரச்னையைத் தீர்க்க சீனத் தரப்புடன் 19 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது ராஜாங்க ரீதியில் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. இந்திய பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவதை பிரதமர் மோடியால் தடுத்துநிறுத்த முடியவில்லை’ என்று விமர்சித்திருக்கிறார்.
மேலும், ‘டோக்லாம் மற்றும் கல்வான் பிரச்னைகளுக்குப் பிறகு லடாக்கில் 2000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்களில் ஈடுபட்டது. இவ்வளவு நடந்தும், எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்’ என்று விமர்சித்திருக்கிறார் கார்கே.
சீனா விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்த நிலையில், அதற்கு உரிய பதிலைத் தரமுடியாமல் பா.ஜ.க-வினர் தவிக்கிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், ‘உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது என்னுடையதாகிவிடுமா? பெயர்களை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது’ என்று கூறியிருக்கிறார். ஒரு வீட்டின் பிரச்னையையும், ஒரு தேசத்தின் இறையாண்மையையும் சமதளத்தில் வைக்க முடியுமா?! காலம் தான் பதில் சொல்லும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY