புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களின் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்.2) வெளியிட்டுள்ளது.
ஒடிசாவில் 8, ஆந்திரப் பிரதேசத்தில் 5, பிஹாரில் 3 மற்றும் மேற்கு வங்கத்தில் 1 ஆகிய மக்களவைத் தொகுகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகனின் தங்கையும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா போட்டியிடுகிறார். அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவை காக்கிநாடா தொகுதியில் களம் காண்கிறார்.
பிஹாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் முகம்மது ஜாவித்தும், கத்திகார் தொகுதியில் தாரிக் அன்வரும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மா பகல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முனிஷ் தமாங் போட்டியிடுகிறார். அங்கு அவர் தற்போதைய பாஜக எம்.பி ராஜு பிஸ்தாவை எதிர்கொள்கிறார்.
இந்தப் பட்டியலுடன் காங்கிரஸ் கட்சி இதுவரை 228 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எனினும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து மவுனம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.