கடற்கரைக்கு வரும் பயணிகள், மணல், கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் வரை அபராதம்..! – எங்கு, ஏன் தெரியுமா?!

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், கடற்கரையில் இருந்து மணல், கற்கள் மற்றும் பாறை படிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று சுற்றுலா பயணிகளுக்கு கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இதனை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இக்கடற்கரையின் நினைவாய் பொருள்களை சேகரிக்கும் நோக்கில், மணல், கற்கள் மற்றும் பாறை படிமங்கள் போன்ற பொருட்களை தங்களுடன் எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், இது தீவுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துவதாக கேனரி தீவுகள் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கேனரி தீவுகள் ஏழு முக்கிய தீவுகளை உள்ளடக்கியது. டெனெரிஃப், கிரான் கனாரியா, லான்சரோட், ஃபுர்டெவென்டுரா, லா பால்மா, லா கோமேரா மற்றும் எல் ஹியர்ரோ. ஒவ்வொரு தீவுக்கும் தனித்தன்மையுடன் இயற்கை அழகை கொண்டிருக்கிறது. இதில் டெனெரிஃப் தான் ( Tenerife) மிகப்பெரிய தீவாக திகழ்கிறது.

லான்சரோட்டின் நிலப்பரப்பு மிகவும் தனித்துவமானதாக திகழ்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட ஸ்கோரியா மற்றும் சாம்பல் படிவுகள் தீவில் கிட்டத்தட்ட கால் பகுதி வரை இந்த கறுப்பு மணல் பரவியிருப்பதோடு, அது இந்த கடற்கரையின் தொன்மையையும், அழகியலையும் பிரதிபலிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இந்த தனித்துவமான அம்சங்களுக்காகவே கேனரி தீவுகளுக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

பொதுவிடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் இக்கடற்கரைக்கு வருகை தரும் சூழலில் ஆண்டிற்கு லான்சரோட் கடற்கரைகளில் இருந்து ஒரு டன் மணல் எடுத்துச் செல்லப்படுவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் கவலையடைந்த அரசு இச்செயல் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கையினை எடுக்க முடிவு செய்தது.

அதன்பேரில் கேனரி தீவுகள் அரசு நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் படி, கடற்கரை பகுதிகளில் இருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,00,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்டும் என்றும், பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் தங்களுடன் எடுத்துச் செல்லும் பொருட்களால், கடற்கரையோரங்களில் இயற்கை சமநிலையை சீர்குலைகும் அளவிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை சமாளிக்க கேனரி அரசு மற்றும் அதிகாரிகள் முயன்று வருவதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு, Lanzarote மற்றும் Fuerteventura விமான நிலையங்களில் மேற்கொண்ட சோதனைகளில் பயணிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பொருள்களில், சுற்றுலா பயணிகள் மணல் மற்றும் கூழாங்கற்களை கடற்கரையின் நினைவாய் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் | Spain

குறிப்பாக தீவுக் கூட்டங்களில் மிகப் பெரிதான டெனெரிஃப் தீவில் சமீபத்தில் கடுமையான வறட்சி நிலவியதையடுத்து, அரசாங்கம் நீர் பற்றாக்குறை அவசரநிலையை பிரகடனப்படுத்தினர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை வளங்களை பாழ்படுத்துவதோடு, இங்கு வந்து தங்கும் சுற்றுலா பயணிகள் உள்ளூர்வாசிகளை விட நான்கு மடங்கு அதிகமாக தண்ணீரை செலவழிப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இயற்கை வளங்கள் கடுமையாக வீணடிக்கப்படுவதாலும், இப்படியே சென்றால் கடுமையான வறட்சியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும் இக்கடுமையான கட்டுப்பாட்டுகளும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.