புதுடெல்லி: கம்போடியாவில் வேலைவாய்ப்பு என்று இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் கம்போடிய அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு 250 இந்தியர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு விவகாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
கம்போடியாவில் உள்ள இந்தியத் தூதரகம், வேலைவாய்ப்புக்காக ஏமாற்றப்பட்ட இந்தியர்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கம்போடிய அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அங்குள்ள இந்தியர்கள் சட்டவிரோதமான இணைய வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் வெளியுறவு அமைச்சகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக 250 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இணைய மோசடி குறித்து இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.500 கோடி வரை இணைய மோசடி மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.