தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணங்கள் : புற்றுநோயால் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மரணங்கள் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தான் காமெடி நடிகர் சேஷு மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் காலமாகினர். இப்போது மற்றொரு காமெடி மற்றும் குணச்சித்ர நடிகரான விஸ்வேஷ்வர(62) ராவ் காலமானார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சுமார் 350 படங்கள் வரை நடித்துள்ளார்.
சென்னை சிறுசேரி பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(ஏப்., 2) காலமாகியுள்ளார். இவரது மனைவி வரலட்சுமி. இவருக்கு பார்கவி, பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். இறுதிச்சடங்கு மாலையில் நடைபெற்றது.