
தெலுங்கிலும் சாதனை படைக்குமா 'மஞ்சும்மேல் பாய்ஸ்'?
சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் பிப்ரவரி 22ம் தேதி மலையாளத்தில் வெளியானது. தமிழகத்திலும் அப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாளத்திலேயே வெளியானது. இங்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய லாபத்தைக் கொடுத்தது.
சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தற்போது இப்படத்தைத் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஏப்ரல் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள். நேற்று இப்படத்தின் தெலுங்கு டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்றதற்குக் காரணம் 'குணா' படத்தின் ரெபரென்ஸ். அப்படத்தில் இடம் பெற்ற 'கண்மனி அன்போடு காதலன்' பாடல் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தாக்கத்திற்குப் பெரும் காரணமாக அமைந்தது.
தெலுங்கு டிரைலரிலும் 'குணா' படத்தின் தெலுங்குப் பாடலான, 'கம்மணி ஈ பிரேமலேகா' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பிபி தான் 'குணா' படத்தில் கமலுக்காக பின்னணி குரல் கொடுத்தவர். அவரது குரலில் தெலுங்கில், “மனுஷுல அர்த்தம் சேஸ்குன இது மாமுல் பிரேமம் காது” என்ற வசனத்துடன் முடியும் தெலுங்கு டிரைலரும் உணர்வுபூர்வமாகவே அமைந்துள்ளது.
தமிழில் பெற்ற வரவேற்பை இப்படம் தெலுங்கிலும் பெறுமா என்பதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.