பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் பற்றிய விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதம நூலகர் சியாத் அஹமட், பிரதிப் பிரதான உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.ஷஹீட், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யஸ்ரி மொஹமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இங்கு பிரதான உரை நிகழ்த்திய பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிடுகையில், ஜனநாயக ஆட்சி முறைமையின் நடைமுறைகளை சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என வலியுறுத்தினார். தேசிய கல்வியின் நோக்கத்தை அடைவதற்கு எதிர்காலத்தில் பாடசாலைகளில் இணைந்துகொள்ளவுள்ள இந்தப் பயிலுனர்கள் ஊடாக சட்டவாக்கத்தின் பணிகள் பற்றிய தெளிவினை பாடசாலை மாணவர் சமூகத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்த ஆசிரியர்களின் ஊடாக எதிர்காலத் தலைமைத்துவத்திற்குத் தேவையான வழிகாட்டல்களும் முறையாகப் பெற்றுக்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு தேசிய கல்வியியற் கல்லூரியிலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பாராளுமன்றம் மற்றும் அதன் சட்டவாக்க முறைமை, பாராளுமன்ற மரபுகள், பாராளுமன்றக் குழுக்கள், பொதுமக்கள் பங்கேற்பு, பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம், திறந்த பாராளுமன்ற எண்ணக்கரு, அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பில் விரிவான புரிதல்கள் வழங்கப்பட்டதுடன், இதில் பிரயோக ரீதியான செயற்பாடுகளும் உள்ளடங்கியிருந்தன.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திருநானந்தம் ஜயகாண்டீபன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிலுனர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரியர் பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) இலங்கை பணிப்பளார் அஷோக ஒபேசேகர உள்ளிட்ட அதிகாரிகளும், இலங்கை பாராளுமன்றத்தின் பிரதம அதிகாரி சுஜீவி கமகே, இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரிகளான துமிந்த விக்ரமசிங்க, ப. ருத்ரகுமார், ஊடக அதிகாரிகளான மகேஸ்வரன் பிரசாத், நுஸ்கி முக்தார், பொதுமக்கள் வெளித்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜய பிரகாஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.