தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி.
சமீபத்தில் இவர், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கலந்துரையாடியிருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நேர்காணலில் சிரஞ்சீவி, தனது வாழ்வில் தான் பின்பற்றும் சிக்கனங்கள் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இது குறித்து பேசியிருக்கும் சிரஞ்சீவி, “எங்கள் வீட்டில் யாரும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் எல்லா லைட்டுகளையும் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஹீட்டர் போடுவார்கள் அதையும் அப்படியே ஆன் செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். நான்தான் அதையெல்லாம் ஆப் செய்வேன். இதெல்லாம் மிடில் கிளாஸ் மென்டாலிட்டி என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. நான் எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன்.
இப்போதும்கூட ஷாம்பூ தீர்ந்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீரை ஊற்றிப் பயன்படுத்துவதுண்டு. சோப் கரைந்து கடைசி நிலைக்கு வந்த பிறகு புதிய சோப்பில் கரைந்து போன சிறிய சோப்பை ஒட்டி வீணாக்காமல் பயன்படுத்துவேன்.
சினிமாவிற்கு நான் வந்த புதிதில் எனது இந்த சிக்கனமான குணங்களை நிறையபேர் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம். இவர்களுக்கு மத்தியில் நாம் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராகிக் காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொள்வேன்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.