Doctor Vikatan: இப்போதைய தலைமுறையினருக்கு 15 வயதிலேயே தலை நரைக்கத் தொடங்குகிறது. 30 ப்ளஸ்ஸிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகின்றன. ஆன்டிஏஜிங் சிகிச்சைகளை எந்த வயதிலிருந்து தொடங்க வேண்டும்…. இளவயது நரைக்கு மருதாணிக் கலவை தடவுவதுதானே பாதுகாப்பானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
நாம் பிறந்த நொடியிலிருந்தே நமக்கு வயதாகத் தொடங்குகிறது. கொலாஜென் என்பதுதான் நம் சருமத்தை இளமையாக, உறுதியாக, எலாஸ்டிக் தன்மையோடு வைத்திருப்பது. 20 வயதுக்குப் பிறகு இந்த கொலாஜென் உற்பத்தி குறையத் தொடங்கும். 40 வயதில், அதன் உற்பதில் 20 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துவிடும்.
சருமத்தில் கொலாஜென் உற்பத்தி குறைவது என்பது மரபியல் ரீதியாகவும் ஏற்படும். வெயிலில் அதிகம் அலைவது, சரியான சருமப் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் சருமத்தின் முதுமைத் தோற்றம் சீக்கிரமாகவும் தீவிரமாகவும் தொடங்குகிறது. அதனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சருமத்துக்கு அவசியமான, அடிப்படையான மாய்ஸ்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கத் தொடங்க வேண்டியது மிக அவசியம்.
சருமத்தில் சுருக்கங்கள் விழுவதுதான் வயதாவதன் அறிகுறி என பலரும் நினைப்போம். ஆனால், சருமத்தில் ஏற்படும் நிற மாற்றம் (pigmentation) கூட முதுமையின் அடையாளம்தான். திடீரென முகத்தில் புள்ளிப்புள்ளியாக வருவது, கருந்திட்டுகள் தோன்றுவது போன்றவை எல்லாம் முதுமையின் அறிகுறிகள்தான். அடுத்து சருமம் வறட்சியடையும். பிறகு கண்களைச் சுற்றி, வாயைச் சுற்றி சுருக்கங்கள், சருமம் தொய்வடைவது போன்றவை எல்லாம் ஏற்படும்.
முதுமை என்பது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பொருந்தும். ஒட்டுமொத்த உடலிலும் அந்த மாற்றம் இருந்தாலும், அதன் பிரதிபலிப்பாக முகத்தில் நாம் அதன் அறிகுறிகளைப் பார்க்கிறோம். சருமப் பராமரிப்பின் மூலம் வெளிப்புற முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுகிறோம். அதேபோல, சரிவிகித உணவு, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் போன்றவற்றின் மூலம் உடலின் உள்புறத்திலிருந்தும் முதுமையைத் தள்ளிப்போடும் வேலைகளைச் செய்ய வேண்டும்.
கூந்தலில் நரை ஏற்படுவதும் முதுமையின் அறிகுறிதான். அது தவிர, கூந்தல் வறண்டுபோவது, புரதச்சத்து குறைவதால் முடியின் வேர்க்கால்கள் பலமிழந்து, முன்னந்தலையில் முடி கொட்டுவது போன்றவை எல்லாம் ஏற்படும்.
தலை நரைக்கத் தொடங்கியதும் முதலில் பலரும் முயற்சி செய்வது மருதாணிப் பொடி தடவுவதைத்தான். அந்தப் பொடியில் தார் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கெமிக்கல்களை பயன்படுத்துவார்கள். அப்போதுதான் அதன் நிறம் சட்டென ஒட்டிக்கொள்ளும் என்பதுதான் காரணம். அந்த ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயமானவை. அடிக்கடி உபயோகிப்பதால் முகத்தில் மங்கு பாதிப்பும் ஏற்படலாம். நிறைய ஹேர் டை பயன்படுத்தும் ஆண்களுக்கு வாயைச் சுற்றி புண்கள், நிற மாற்றம் இருப்பதைப் பார்க்கலாம். காரணம், மீசை, தாடிக்கெல்லாம் டை போடுவதுதான். எனவே, அமோனியா, பிபிடி இல்லாத ஹேர் கலர்களாக பார்த்து உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.