பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ். அவரது நிறுவன மருந்துப்பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த நீதிமன்றம் இத்தகைய மீறல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு பொருளின் விளம்பரத்தின்மீதும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் பதிலளிக்க வேண்டும்” என எச்சரித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு பாபா ராம்தேவ் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த மாதம் 19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முதல் நாள்தான் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது என்பதையும் வழக்கு தொடர்ந்தவர் தரப்பு சுட்டிக்காட்டியது. இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், “பாபா ராம்தேவின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன… இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்” என காட்டமாகத் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் இன்று பாபா ராம்தேவ் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். மேலும், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார். அப்போது நீதிபதிகள், “பதஞ்சலி வழக்கில் ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு வழக்கறிஞர் மூலம் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்… எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று எனக் கூறுகிறீர்கள்? அறிவியல் ரீதியாக நிரூபணமாகியிருக்கிறதா? அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சகத்தில் ஏதாவது கோரிக்கை வைத்தீர்களா? இந்த வழக்கில் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும்” என வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.