அமெரிக்காவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம்பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஐசிசி நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “ 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் விராட் கோலி நன்றாக விளையாடி வருகிறார். இனி வரும் போட்டிகளில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை மேம்படுத்துவார்.
அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார். தேர்வாளர்கள் சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். கிரிக்கெட் சமூக வலைதளங்களில் அல்ல மைதானத்தில் விளையாடப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.