சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் டிட்டெக்டர் தளத்தில் இதனை தெரிவித்திருந்தனர். இதை வாட்ஸ்அப் தரப்பும் உறுதி செய்துள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு உலக அளவில் வாட்ஸ்அப் சேவையை தங்களால் பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்தனர். அமெரிக்காவில் 12 ஆயிரம் பேர், இந்தியாவில் 30 ஆயிரம் பேர், பிரிட்டனில் 46 ஆயிரம் பேர், பிரேசில் நாட்டில் 42 ஆயிரம் பேர் என வாட்ஸ்அப் சேவை முடக்கம் குறித்து டவுன் டிட்டெக்டர் தளத்தில் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவில் பயனர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்துவதிலும் சிக்கல் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கலும் இதில் ஹைலைட் செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலான பயனர்கள் மெசேஜ் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.
“பயனர்களில் சிலர் இப்போது வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதை நாங்கள் அறிவோம். விரைந்து 100 சதவீத பயன்பாட்டு சேவையை பயனர்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்” என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மேத்தாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
We know some people are experiencing issues right now, we’re working on getting things back to 100% for everyone as quickly as possible
— WhatsApp (@WhatsApp) April 3, 2024