புதுடெல்லி: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 112 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் மே 13முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 112 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
இதன்படி மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், சந்தபாலி தொகுதியில் போட்டியிடுகிறார். பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக்கை எதிர்த்து ஹிஞ்சிலி தொகுதியில் சிசிர் மிஸ்ரா போட்டியிடுகிறார். தற்போதைய எம்எல்ஏக்கள் 22 பேரில் 21 பேருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. பட்டியலில் 8 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பிஜேடியில் இருந்து விலகி தங்களுடன் இணைந்த 3 எம்எல்ஏக்களுக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
மொத்தம் 147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் பிஜேடி 112 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பிஜேடி தலைவர் நவீன்பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாஜக 23 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.