கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிலாய் விபின்சந்திரா அன்ஜாரியா முன் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்று தெரியவந்திருக்கிறது.
இன்று நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஸ்ரீனிவாஸ், ஒரு ஹால் அருகே பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒரு கோப்பினை (File) கொடுத்துவிட்டு, உடனடியாக யாரும் அறியும் முன் தலைமை நீதிபதி அன்ஜாரியா முன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு பௌரிங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரியொருவர், “அவர் கோர்ட் ஹால் ஒன்றில் நுழைந்து கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டார். அவர் ஏன் இத்தகைய தீவிரமான செயலைச் செய்தார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டனர். சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி அன்ஜாரியா, `அவர் கூர்மையான பொருளை எவ்வாறு உள்ளே கொண்டுவந்தார். சம்பவ இடத்திலிருந்து போலீஸார் ஆதாரங்களைக் கைப்பற்றி பதிவுசெய்யவும்’ என்று உத்தரவிட்டார்.
இன்னொருபக்கம், பாதுகாப்பு அதிகாரியிடம் அவர் ஒப்படைத்த கோப்பில் என்ன தகவல் இருந்தது என்றும் தெரியவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அதிகாரிகள் எந்த ஆவணத்தையும் பெறக் கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம், `நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் அந்தக் கோப்பு சமர்ப்பிக்கப்படாததால் அதைச் சரிபார்க்க முடியாது’ என்று கூறிவிட்டது. இதனால், அந்த நபர் உடல்நலம் தேறியதும் `எதற்காகத் தற்கொலைக்கு முயன்றார், அந்தக் கோப்பில் என்ன இருக்கிறது’ என்பது குறித்து வாக்குமூலம் பெற போலீஸார் காத்திருக்கின்றனர்.