Mustafizur Rahman Return To Bangladesh: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 15 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரவு நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையலிான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஒவ்வொரு அணிகளும் தற்போது அவற்றின் பிளேயிங் லெவனை நிலையாக்கி வருகின்றன எனலாம். குறிப்பாக, சிஎஸ்கே, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ, குஜராத் உள்ளிட்ட அணிகள் தொடரில் தற்போது நல்ல நிலைமையில் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களின் காம்பினேஷனில் பெரியளவில் குழப்பம் இல்லை எனலாம்.
அடுத்தாண்டு மெகா ஏலம்
அதே சமயம், தொடரின் தொடக்கத்தில் இருந்தே திணறிவரும் மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களின் வெற்றியை தரக்கூடிய காம்பினேஷனை தேர்வு செய்ய இயலாமல் தடுமாறி வருகின்றனர். ஹைதராபாத், டெல்லி அணிகளும் இப்போதுதான் தங்களின் அணியை கட்டுமைத்து வருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் தேர்வு, இந்திய இளம் வீரர்களின் தேர்வு என்பது ஹைதராபாத், டெல்லி அணிகளின் பிரச்னையாக இருக்கிறது.
அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களின் அடிப்படையான அணியை கட்டமைக்க அணிகள் திட்டமிடும். எனவே, இந்த ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை அடுத்தாண்டு தக்கவைக்க அணிகள் முற்படும் என்பதால் பல வீரர்கள் மேல் கடும் அழுத்தமும் இருக்கும். குறிப்பாக, வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
சிஎஸ்கேவின் புதிய பார்முலா
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை பார்த்தோமானால் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஆகியோரை இம்முறையும் கண்டிப்பாக தக்கவைப்பார்கள். தோனிக்கு நிச்சயம் இது கடைசி சீசனாகவே இருக்கும் எனலாம். மற்றபடி ரச்சின் ரவீந்திரா, பதிரானா ஆகியோரும் நிச்சயம் சிஎஸ்கேவின் லிஸ்டில் இருப்பார்கள். தற்போது முஸ்தபிசுர் ரஹ்மானும் சிஎஸ்கேவில் நல்ல கவனத்தை பெற்றுள்ளார்.
தற்போது தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான், சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கேவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் எனலாம். சிஎஸ்கே வரலாற்றில் இரண்டு பிரதான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அதன் முக்கிய பிளேயிங் லெவனில் (CSK Playing XI) விளையாடுவது என்பது இதுவே முதல்முறை.
தாயகம் திரும்பிய முஸ்தபிசுர்
பதிரானா – முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரின் காம்பினேஷனை சிஎஸ்கே தற்போது பரிசோதித்து வரும் நிலையில், அதில் சிறிய சிக்கல் எழுந்துள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) தற்போது திடீரென வங்கதேசதத்திற்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. முஸ்தபிசுர் ரஹ்மான் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடும் அனுமதியை பெற்றுள்ளார். அதற்கு பின், வங்கதேசத்தில் ஜிம்பாப்வே அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட இருப்பதால், அவர் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின் ஜிம்பாப்வே டி20 தொடரை விளையாடச் செல்வார் என கூறப்படுகிறது.
ஆனால், அவர் தற்போது சென்றிருப்பது வேறொரு காரணத்திற்காக… வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2024) விளையாடுவதற்கான விசாவை பெறுவதற்கு முஸ்தபிசுர் ரஹ்மான் தாயகம் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. அவரின் பயோமெட்ரிக்ஸை வழங்கப்படும் என்பதற்காக அவர் தற்போது அங்கு சென்றிருக்கிறார். அதன்பின், பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுவதற்கு இரண்டு, மூன்று தினங்கள் இருக்கலாம்.
ஒரு போட்டியில் மாற்றம்
இதனால், அவர் சில நாள்கள் வங்கதேசத்திலேயே தங்க வேண்டும். சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் ஹைதராபாத் நகரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (SRH vs CSK) வரும் ஏப். 5ஆம் (வெள்ளிக்கிழமை) சந்திக்கிறது. எனவே, இந்த போட்டியில் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார் என தெரிகிறு. இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஏப். 8ஆம் தேதி நடைபெறும் சென்னை – கொல்கத்தா (CSK vs KKR) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன் முஸ்தபிசுர் ரஹ்மான் அணியில் இணைவார் என தெரிகிறது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பிளேயிங் லெவனில் சிறிய மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.