சூர்யகுமார் யாதவ் ரிட்டன்ஸ்… மும்பை இந்தியன்ஸ் ஹேப்பி! டெல்லிக்கு எதிராக களமிறங்குகிறார்

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டியிருக்கிறார். அவர் உடல் தகுதியை எட்டிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றளித்துள்ளது. இதனால் அவர், ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களம் இறங்க இருக்கிறார். இந்த செய்தியால் மும்பை இந்தியன்ஸ் டீம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. 

மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடிய அந்த அணி மூன்று போட்டிகளிலுமே படுதோல்வியை சந்தித்தது. அத்துடன் 5 முறை சாம்பியனான மும்பை இப்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இனி வரும் போட்டிகளிலாவது தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி இருக்கிறது. 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மும்பை அணி வலுவாக இருந்தாலும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இரண்டும் ஒரு புள்ளியில் இணையாமல் இருக்கிறது. பேட்டிங் சரியாக இருந்தால் பந்துவீச்சு மோசமாக இருக்கிறது, பந்துவீச்சு சுமாராக இருந்தால் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இதனை சரிசெய்தாக வேண்டிய நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ் இருந்த சமயத்தில் தான் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து அந்த அணிக்குள் வர இருக்கிறார். 

சூர்யகுமார் யாதவ் ஆப்பிரிக்க தொடரில் காயமடைந்தார். அதன்பின் அறுவைசிகிச்சை செய்து கொண்ட அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருந்தார். காயத்தில் இருந்து குணமடைந்த சூர்யகுமார் அண்மையில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். இருப்பினும் முழு உடல் தகுதியை எட்டாததால், என்சிஏ அவருக்கு பிட்னஸ் சர்ட்டிபிகேட்டை கொடுக்கவில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் இருந்தது. இப்போது பிட்னஸ் டெஸ்டில் வெற்றி பெற்றதால் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவது, அந்த அணியின் பேட்டிங் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குவேனா மகபா, ஸ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.