வயநாடு: “நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல்” என்று வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்கான போராட்டம்தான் இந்தத் தேர்தல். ஒருபக்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் இருக்கிறார்கள். மறுபக்கம், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்கான சக்தியாக நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வதேராவும் உடன் இருந்தார். இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி வத்ரா, “ஏன் அது நிகழக் கூடாது” என தெரிவித்தார்.
Wayanad is my home, and the people of Wayanad are my family. From them, I have learned a great deal over the last five years and received an abundance of love and affection. It is with great pride and humility that I file my nomination for Lok Sabha 2024 once again from this… pic.twitter.com/rjgz0cYTyB
வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார். வாகனத்தில் இருந்தபடி ஊர்வலமாகச் சென்ற அவருக்கு, ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியின்போது கூடியிருந்த மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன்.
உங்களை நான் வெறும் வாக்காளர்களாக கருதவில்லை. எனது சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ, நடத்துகிறனோ அதைப் போலவேதான் உங்கள் அனைவரையும் கருதுகிறேன், நடத்துகிறேன். வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள், சகோதரர்கள் உள்ளனர். இதற்காக எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு மனித – விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி பிரச்சினை இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நான் வயநாடு மக்களுடன் துணை நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி பிரச்சினையில் அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க முயன்றோம். அது தொடர்பாக முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். துரதிருஷ்டவசமாக அவர்கள் எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. மத்தியிலும், கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இந்த இரண்டு பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இங்கு நான் அரசியல் பேசவில்லை. கட்சிகள், சமூகம், வயது போன்றவற்றைக் கடந்து வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரும், எனக்கு அன்பும், ஆதரவும், மரியாதையும் தந்து என்னை அவர்களின் சகோதரனாக நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஆனி ராஜாவும் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சி கேரளாவில் ஆட்சி நடத்திவரும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கிறது. இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், கேரளாவில் இரு தரப்புமே வலுவான வேட்பாளர்களுடன் எதிரெதிர் அணியாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.