தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சில படங்கள் ஏப்ரல் மாத ரிலீஸுக்குத் தயாராகிவிட்டன.
நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் இம்மாதத்தில் வெளியாகவிருந்த சில பெரிய திரைப்படங்களின் தேதியைத் தள்ளி வைத்துவிட்டனர். சில திரைப்படங்கள் தேர்தல் தேதிக்கு முன்பாகவே ரமலான் வெளியீடாகத் திரைக்கு வருகின்றன. சில தமிழ்த் திரைப்படங்கள், தமிழகத் தேர்தல் தேதிக்குப் பிறகு இம்மாத இறுதியில் திரைக்கு வருகின்றன. தமிழ் மட்டுமல்லாது, இந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் சில முக்கியமான படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பேமிலி ஸ்டார்:
இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘பேமிலி ஸ்டார்’. ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டுமொரு முறை பரசுராமுடன் இணைந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. நடிகை மிருணாள் தாக்கூர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
கள்வன்:
‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘கள்வன்’. இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பின்பு மீண்டும் நடிகை இவானாவுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி . இயக்குநர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 4-ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
மைதான்:
‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனம் பெற்ற இயக்குநர் அமித் ஷர்மா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மைதான்’. ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பிரியாமணி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையத் அப்துல் ரகீம் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.
டியர்:
‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படத்தின் இயக்குநரான ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம், ‘டியர்’. ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் ‘ரிபெல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இம்மாத தொடக்க வாரத்தில் இவரின் ‘கள்வன்’ திரைப்படமும் திரைக்கு வருகிறது. இதுமட்டுமின்றி அடுத்தடுத்து இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பெரிய லைன்-அப்பைத் தன் கைவசம் வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ரோமியோ:
அறிமுக இயக்குநர் விநாயக் வைதியநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘ரோமியோ’. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் இயக்குநரான விநாயக்கின் குறும்படங்களைப் பார்த்த விஜய் ஆண்டனி அவரை போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். அதன் பின்புதான் இத்திரைப்படம் குறித்தான உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. இத்திரைப்படமும் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆவேஷம்:
‘ரோமஞ்சம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘ஆவேஷம்’. மாறுபட்ட தோற்றத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்திருக்கிற இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வர்ஷங்களுக்கு ஷேசம்:
‘ஹிருதயம்’ திரைப்படத்தின் அதிரடியான வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி ‘வர்ஷங்களுக்கு ஷேசம்’ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசன் இயக்கியிருக்கிற இத்திரைப்படத்தில் பிரணவ் மோகன்லால், தயன் ஶ்ரீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘ஹிருதயம்’ திரைப்படத்தில் கதாநாயகன் கேரளத்திலிருந்து சென்னைக்கு வந்து கல்லூரியில் படிப்பதுபோல் இத்திரைப்படத்தில் கதாநாயாகன் கேரளத்திலிருந்து நடிப்பின் மீது கொண்ட காதலால் கோடம்பாக்கம் கிளம்பி வருகிறார்.
ரத்னம்:
இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக நடிகர் விஷால் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. தேவி ஶ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலுடன் நடிகை பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருக்கிற இத்திரைப்படம் இம்மாதம் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அரண்மனை 4:
இயக்குநர் சுந்தர்.சி-யின் ‘அரண்மனை’ பிரான்சைஸில் அடுத்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அரண்மனை 4’. இந்தப் பாகத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இயக்குநர் சுந்தர்.சி-யே இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இத்திரைப்படமும் இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் எந்தப் படத்திற்காக நீங்கள் வெயிட்டிங் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.