டோக்கியோ: புதன்கிழமை அன்று தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் கொண்டுள்ளனர். இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர்களை அணுகுவது சவாலான காரியமாக உள்ளது. இதில் சிலர் சுரங்களில் சிக்கி இருப்பதாகவும் தகவல். கடந்த 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்பட்ட பூகம்பங்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் நிலஅதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர்.
மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் கடுமையான கட்டுமானம் சார்ந்த விதிகள் காரணமாக தீவு பகுதிகளில் பெரிய அளவிலான பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பூகம்பத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. நல்வாய்ப்பாக நாங்கள் பாதுக்காப்பாக உள்ளோம். பெரிய அளவில் உயிர் சேதம் இல்லை” என சாங் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
“கடந்த 1999-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 2,400 பேர் உயிரிழந்தனர். அதுவே இந்த தீவு தேசத்தின் மிக மோசமான இயற்கை பேரிடராக உள்ளது. ரிக்டர் அளவில் 7.6 என அப்போது பதிவாகி இருந்தது. அதன்பிறகு புதன்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பம், ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகி உள்ளது.
ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 34.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது” என தைவான் நாட்டின் மத்திய வானிலை நிர்வாகத்தின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் தெரிவித்துள்ளார்.
மலையேறும் சாகசத்தில் ஈடுபட்ட மூவர், ஓட்டுநர்கள் இருவர் மற்றும் குவாரியில் ஒருவர் என உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற மூவர் குறித்த தகவல் வழங்கப்படவில்லை. ஹுவாலியன் பகுதியில் தான் இந்த உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இதோடு சுமார் 946 பேர் பூகம்பத்தால் காயமடைந்துள்ளனர். இதனை அந்த நாட்டு தேசிய தீயணைப்பு முகமை உறுதி செய்துள்ளது.
தைவானில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு இருந்தது. பூகம்பத்தின் அதிர்வுகளுக்கு பிறகு சேதமடைந்த கட்டிடங்கள், மீட்பு பணிகள் போன்றவற்றை உள்ளூர் ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்தன. சாலை, ரயில் பாதை முதலியவை சேதமடைந்துள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாதைக்குள் மக்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தை அடுத்து தைவான், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள புஜியன் மாகாணம் மற்றும் ஹாங்காங் பகுதியிலும் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.