நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8.78 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அடுத்த மல்லூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செங்குட்டுவேல் தலைமையிலானோர் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி பாதுகாப்புடன் சென்ற வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வாகனத்தில் ரூ.8.78 கோடி மதிப்புடைய 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவை அனைத்தும் சேலத்திலிருந்து மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள நகைக் கடைகளுக்கு கொண்டு செல்லவதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. எனினும், அவர்களிடம் இருந்த ஆவணங்களுக்கும், நகைகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.
இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராசிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதனை பார்வையிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம், இந்த நகைகள் அனைத்தும் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணத்தை செலுத்தி அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.