சென்னை: பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பறக்கும் படையினருடன் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபரும், ஒப்பந்ததாரருமான ஒருவரது வீட்டில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல, கொண்டித்தோப்பு பகுதியிலும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் மின்சாதன பொருட்கள் மொத்த விநியோக தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, பரிசு பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு இவர்கள் சப்ளை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புரசைவாக்கம் உட்பட சென்னையில் மேலும் 3 இடங்களிலும் சில தொழிலதிபர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது. இந்த நடவடிக்கை தொடரும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.