புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், குஜராத்தின் வல்சாத் மக்களவைத் தொகுதியில் (எஸ்டி) களம் காண்கிறார் தவால் படேல். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் சற்று விறுவிறுப்பாகவே காணப்படுகிறது. சமூக ஊடகங்களை கையாளுவதில் கைதேர்ந்தவராக அறியப்படும் தவால் படேல் பின்புலம் அறிவோம்.
சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்: 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், 2 பாஜக வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பாஜகவுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
தெற்கு குஜராத்தில் அமைந்துள்ள வல்சாத் தொகுதி, அதன் வளமான இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்காக அறியப்பட்ட ஒரு பகுதியாகும். வல்சாத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்துடன் விவசாயம் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளது என்றே கூறலாம். குஜராத்தில் உள்ள வல்சாத் தொகுதிக்கான 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.சி.படேல் வெற்றி பெற்றார். கே.சி.படேல், வல்சாத் பகுதியில் அனுபவமிக்க அரசியல்வாதியாக அறியப்படுகிறார்.
பொதுச் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு, மக்களை அணுகக்கூடியவராகப் பெயர் பெற்றவர். படேலின் பிரச்சாரம் வளர்ச்சிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. ஆனால் தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், வல்சாத் தொகுதியில் தேர்தல் அரசியலுக்கு புதுமுகமான தவால் படேலை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பாஜக தலைமை. அவரின் பின்புலம் குறித்து காண்போம்.
யார் இந்த தவால் படேல்? – சூரத்தை தளமாகக் கொண்ட தவால் படேல் (Dhaval Patel) சமூக வலைதள கையாளுவதில் திறமை மிகுந்த ஆளுமையாக கருதப்படுகிறார். சூரத்தில் பி.டெக் பட்டமும், புனேவில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். ஐபிஎம், கேப்ஜெமினி, அக்சென்ச்சர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பணியாற்றியுள்ளார். மாதம் லட்சக்கணக்கில் பணம் பெற்ற அவர், 2021-ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு பாஜகவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதோடு, ‘Bharat ke Janjatiya Krantiveer’ உள்ளிட்ட புத்தகத்தை எழுதியுள்ளார்.
தவால் படேல் கடந்த 15 ஆண்டுகளாக தெற்கு குஜராத்தில் உள்ள பழங்குடியின சமூகத்துக்காக பணியாற்றி வருகிறார். மோடி, அமித் ஷா உள்ளிட்டோருக்கு சமூக வலைதள பிரச்சாரங்களில் தீவிரமாக பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
தோடியா படேல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அவர், பாஜகவின் பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் தேசிய சமூக ஊடகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அனந்த்பாய் படேலை எதிர்த்து, களமிறங்கும் இணைய ஆளுமை தவால் படேல் தனது வெற்றியை நிலைநாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முந்தைய பகுதி: ‘திரிபுரா இளவரசி’யை களமிறக்கிய பாஜக… – யார் இந்த கிருத்தி சிங்? | 2024 தேர்தல் கள புதுமுகம்