புதுடெல்லி: சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். இவரை மதுராவில் போட்டியிட வைக்கத் திட்டமிட்டிருந்த காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஹரியாணாவின் பிவானியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். தனது விளையாட்டுகளின் வெற்றிக்காக இவர், அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்டப் பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விஜேந்தர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வியுற்றார்.
இவரை மீண்டும் தொகுதி மாற்றி தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இவர் சார்ந்த ஜாட் சமூகத்தினர் உத்தரப் பிரதேசம் மேற்கு பகுதியில் அதிகமாக உள்ளனர். இதனால், விஜேந்தர் சிங்கை இந்த மக்களவைத் தேர்தலில் மதுராவில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது.
மதுராவில் முதல் பெண் எம்பியாக பாலிவுட் நடிகையான ஹேமமாலினி 2014 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 2019 மக்களவைத் தேர்தலிலும் நடிகை ஹேமமாலினியே மதுராவாசிகள் எம்பியாக்கினர். இந்த இரண்டு தேர்தல்களிலும் ஹேமமாலினியை உ.பி.யின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால், இந்த முறை அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராகி உள்ளது. இந்தக் காரணத்தால் அதிக ஆதரவு பெற்று மீண்டும் பாஜக வேட்பாளராகிவிட்டார் ஹேமமாலினி.
இருப்பினும், மதுராவில் காங்கிரஸ் தனது வேட்பாளராக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பெயரை அறிவிக்க இருந்தது. இதனால், பாஜகவின் ஹேமமாலினிக்கும், காங்கிரஸின் விஜேந்தருக்கும் மதுராவில் நேரடிப் போட்டி உருவாகும் சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், விஜேந்தர் சிங் இன்று திடீர் என பாஜகவில் இணைந்துவிட்டார். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், நேற்று இரவு வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுகளுக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்து வந்தார் விஜேந்தர் சிங். மேலும் பாஜகவுக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனைகள் போராட்டத்துக்கும் ஆதரவளித்தவர் விஜேந்தர் சிங்.
ஹரியாணாவில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பாஜக ஆட்சி செய்கிறது. இம்மாநிலத்தில் குத்துச்சண்டை வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காதமையால் ஹரியாணாவின் குத்துச்சண்டை வீரர்கள் ஆளும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலாவும் பாஜகவிடமிருந்து பிரிந்துவிட்டார். இதனால், சரிவு நிலையிலிருந்த பாஜகவுக்கு விஜேந்தரின் வரவு பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாஜகவில் இணைந்த விஜேந்தர் சிங் கூறும்போது, ‘எனது தாய் வீட்டிற்கு திரும்பியது போல் நான் பாஜகவில் உணர்கிறேன். இக்கட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை முக்கியமானது. நான் இக்கட்சியிலிருந்து அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய மரியாதையையும், கவுரவத்தையும் பெற்றுத் தருவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக, அந்த சமூகத்தின் ஆதரவு பெற்ற விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.