‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘GOAT’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பகிர்ந்த அவர், ” வெங்கட் பிரபு சார் விஜய்யின் GOAT படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அப்போது நான் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தை பிஸியாக இயக்கி நடித்துக்கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன். வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, `இந்த வாய்ப்பை விட விரும்பவில்லை, ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை!’ என்றேன்.
நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் இயக்குநரிடம் சொல்லி எப்படியாவது நடிக்கலாம். ஆனால் நானே இயக்குநராக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதை அவரும் (வெங்கட் பிரபு) புரிந்துகொண்டு எதிர்காலத்தில் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என்று கூறினார்.
வினீத் சீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், பிரணவ் மோகன்லால், தியான் சீனிவாசன், கல்யாணி பிரியதர்ஷன், பசில் ஜோசப், ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது