டீம் மீட்டிங்கிற்குத் தாமதமாக வரும் வீரர்கள் சூப்பர்மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விதியை உருவாக்கியிருக்கிறது. இதை ஒரு விநோதமான தண்டனையாக அந்த நிர்வாகம் அளித்துவருகிறது.
ஐபிஎல் போட்டியில் 5 கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது. அடுத்த போட்டியில் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்ததாக அந்த அணி வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட இருக்கிறது.
இதனிடையே மும்பை அணி நிர்வாகம் தற்போது அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனரான இஷான் கிஷனுக்கு அளித்த தண்டனை இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது டீம் மீட்டிங்கிற்குத் தாமதமாக வரும் வீரர்கள் சூப்பர்மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒரு விதியை உருவாக்கி இருக்கிறது.
அந்தவகையில் மீட்டிங்கில் கலந்துகொள்ளத் தவறிய இஷான் கிஷன் உட்பட இரண்டு வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோவுடன் கூடிய சூப்பர்மேன் உடை அளிக்கப்பட்டு அடுத்த போட்டிக்குச் செல்லும்போது அதனை அணிய வேண்டும் எனத் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதனை ஏற்று இஷான் கிஷனும் விமான நிலையம் செல்லும்போது அந்த உடையை அணிந்து சென்றிருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனங்களையும் பெற்று வருகிறது.