புதுடெல்லி: ஸ்மிருதி இரானிக்கு எதிராக தான் போட்டியிட வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் விரும்புவதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் கணவருமான ராபர்ட் வதேரா, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “அமேதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டுவிட்டார்கள். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்பியாக வேண்டும் என அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.
நான் அரசியலில் சேர்ந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தத் தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 1999-ல் பிரியங்கா உடன் நான் மேற்கொண்ட முதல் பிரச்சாரமே அமேதியில்தான் நடந்தது.
அமேதியின் தற்போதைய எம்பியான ஸ்மிருதி இரானி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். அவர் தனது அதிகாரத்தை கூச்சல் எழுப்பவும், காந்தி குடும்பத்தை குறைகூறவுமே பயன்படுத்துகிறார். ரேபரேலி, அமேதி, சுல்தான்பூர் ஆகிய தொகுதிகளுக்காக காந்தி குடும்பம் நிறைய செய்திருக்கிறது; கடுமையாக உழைத்திருக்கிறது.
ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்ததற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். காந்தி குடும்ப உறுப்பினர் ஒருவர், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
கடந்த காலங்களில் நான் யோரோடு எல்லாம் இணைந்து பணியாற்றினேனோ அவர்கள் இன்னமும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். எனது பிறந்தநாளின்போது எனக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் மூலமாக அவர்கள் என்னை அணுகுகிறார்கள். மக்களுக்கு உதவுவதில் எனக்குள்ள ஆர்வத்தை அறிந்து எனது பிறந்தநாள்களில், மக்களுக்கு உதவக்கூடிய முகாம்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
2004, 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும், கடந்த முறை வயநாட்டிலும் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்றார். இம்முறையும் அவர் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. வயநாட்டில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேநேரத்தில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ரேபரேலி எம்பியான சோனியா காந்தி, மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், ரேபரேலியில் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமேதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ராபர்ட் வதேரா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.