அனாதையான திருடனுக்கும் அவனால் தத்தெடுக்கப்பட்ட தாத்தாவிற்கும் இடையே பூக்கும் பாசத்தைப் பேசுகிறது `கள்வன்’.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) வாழ்ந்து வருகிறார்கள். வனக்காவலர் பணியில் சேர முயன்றுகொண்டிருக்கும் கெம்பா, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தத்தெடுத்து, தன் வீட்டிற்குக் கூட்டி வருகிறார்.
இத்தனை வறுமையிலும் தாத்தாவைத் தத்தெடுக்கக் காரணம் என்ன, காட்டு யானைகளால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் என்ன, இறுதியில் தன் ஆசைப்படி வனக்காவலர் பணியில் கெம்பா சேர்ந்தாரா போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் திரைக்கதையால் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பி.வி.சங்கர்.
வீடுகளுக்குள் புகுந்து திருடுவது, காதலி பின்னால் சுற்றுவது, நண்பனுடன் சேர்ந்து கிராமத்தினரைக் கலாய்ப்பது என ஜாலியான இளைஞனாக ஜி.வி.பிரகாஷ். மறுபுறம், சென்டிமென்ட், வஞ்சகம், குற்றவுணர்வு என அதே கதாபாத்திரத்தின் மற்ற பரிமாணங்களை முடிந்தளவு கரைசேர்க்கப் போராடியிருக்கிறார். ஒரு மூட்டை ஒன்லைன் காமெடிகளுடன் KPY தீனா படப்பிடிப்புக்கு வந்தாலும், அவற்றில் பாதி காமெடிகளே க்ளிக் ஆகியிருக்கின்றன. அதேநேரம், தொய்வான பல இடங்களில் தன் காமெடிகளால் ஓரளவிற்கு ஆறுதல் தருவது இவர் மட்டுமே! அதே சமயம் காமெடி என்ற பெயரில் வரும் உருவக்கேலிகளைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் கதாநாயகனைப் போலக் கலக்கும் பாரதிராஜா, தன் அனுபவ நடிப்பால் வலுசேர்த்திருக்கிறார். சேட்டை, நக்கல் என ஒருபக்கம் நம்மை ரசிக்க வைத்ததோடு, தன் உணர்வுபூர்வமான நடிப்பாலும் உடல்மொழியாலும், அந்தரத்தில் தொங்கியிருக்க வேண்டிய கதாபாத்திரத்தைத் தாங்கி நிறுத்தியிருக்கிறார். தொடக்கத்தில் சுவாரஸ்யமாக அறிமுகமான கெம்பராஜின் காதலியான இவானா கதாபாத்திரம், சிறிது நேரத்திலேயே சம்பிரதாய நாயகியாக மாறிவிடுகிறது. ஆனால் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ஒரு மலை அடிவார கிராமத்தின் வாழ்விடங்களையும், அங்குள்ள தோட்டங்களின் பசுமையையும் யதார்த்தமாகவும், ரம்மியமான ஒளியமைப்பிலும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதோடு, கதைக்களத்திற்கான முதுகெலும்பாகவும் மாற்றியிருக்கிறது இயக்குநர் பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு. தறிகெட்டு ஓடும் பின்கதைகளைச் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் தொகுக்க சான் லோகேஷின் படத்தொகுப்பு தவறுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில், ‘அடி கட்டழகு கருவாச்சி’ பாடல் மட்டும் இதம் தருகிறது. மற்ற பாடல்கள் திரைக்கதைக்கு வேகத்தடை மட்டுமே. முழு படத்திலும் தன் பின்னணி இசையால் நிரப்பியிருக்கிறார் ரேவா. க்ளைமாக்ஸ் காட்சியின் சேஸிங்கில் அது க்ளிக் ஆகியிருக்கிறது. என்.கே.ராகுலின் உழைப்பைக் கலை இயக்கத்தில் உணர முடிகிறது. யானைகள் தொடர்பான காட்சிகளிலிருந்த நேர்த்தி, புலி தொடர்பான காட்சியில் சறுக்குகிறது. ஏதோ பொம்மை புலியைக் கொண்டு வந்த அனிமேஷன் செய்த வகையில் படு செயற்கையாக இருக்கிறது அந்த சீக்குவென்ஸ்.
தாத்தாவைத் தத்தெடுப்பது, அதற்கான காரணத்தைப் பின்கதையாகச் சொல்வது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் தீனா செய்யும் திருட்டு வேலைகள், ஊரில் செய்யும் சேட்டைகள், கதாநாயகியைச் சந்திக்கும் ரகளையான இடம் என ஓரளவிற்குச் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் தொடங்குகிறது படம். ஆனால், அடுத்த ரவுண்ட்டே கதாநாயகியை வன்தொடரும் கதாநாயகன், க்ளீச்சேவான காதல் வசனங்கள், நாயகன் திடீர் என்று ஃபாலோ செய்வதை நிறுத்தியதால் கதாநாயகிக்குக் காதல் வருவது எனப் பின்கதை சுவாரஸ்யமும் புதுமையும் இல்லாமல் நீண்டுகொண்டே போகிறது. ஒரு கட்டத்தில், இப்படத்தின் கதைக்கரு என்ன, திரைக்கதை எதை நோக்கி நகர்கிறது, எப்போது இந்தப் பின்கதை முடியும் என அடுக்கடுக்கான கேள்விகள் அலுப்பையே தருகின்றன. ஆங்காங்கே க்ளிக் ஆகியிருக்கும் தீனாவின் காமெடிகளும், ஊர்க்காரர்களின் சேட்டைகளும் மட்டுமே ஆறுதல் தர, இடைவேளையில் பயங்கரமான (!) ட்விஸ்ட்டைத் தருகிறது படம். அதோடு ஒருவழியாகக் கதை என்ற பொக்கிஷத்தையும் கண்டடைகிறது. இதுக்குதானா பாஸ் யூடர்ன் பண்ணி, டேபிளை எல்லாம் நொறுக்குனீங்க?!
படத்தின் கரு நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் வரிசை கட்டும் கிளைக்கதைகளும், பின்கதைகளும், “ஏன்பா தூரத்துல வரும்போது நல்லா தெரியிற. கிட்ட வர வர ஏன்டா திடீர்னு காணாம போய்டுற?” எனக் கதைக்கருவைப் பார்த்துக் கேட்க வைக்கின்றன. சிதறியோடும் திரைக்கதையை பாரதிராஜாவின் சேட்டைகளும், காட்டு யானை இவர்களைப் படுத்தும் பாடும் சிறிது சுவாரஸ்யமாக்குகிறது. ரேஷன் கடை, விவசாயம் நிலம் என மாற்றி மாற்றி இவர்கள் இரவில் காவல் செய்யும் எபிசோடு ஆறுதல்தரும் காமெடி. உணர்வுபூர்வமான காட்சிகள் யூகிக்கும்படி க்ளீஷேவாக இருந்தாலும், அதை தன் நடிப்பால் ஓரளவிற்கு நேர் செய்ய முயன்றிருக்கிறார் பாரதிராஜா.
நம்பகத்தன்மையே இல்லாமல் நீளும் க்ளைமாக்ஸ், பார்வையாளர்களை நிஜமாகவே காட்டில் ட்ரெக்கிங் செய்த அளவுக்கு ‘டயர்ட்’ ஆக்குகிறது. காட்டு யானைகள் பற்றிய புரிதலே இல்லாமல், அவற்றை ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்த இடமும், பாரதிராஜாவின் பின்கதையின் பொருள் தரும் குழப்பமும் எனக் கடைசி வரை சுவாரஸ்யத்தைத் தொட்டு விடக்கூடாது என்பதில் சபதம் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்க வேண்டிய கதையை, தேவையே இல்லாத பின்கதைகள், கிளைக்கதைகள், வரிசை கட்டும் பாடல்கள் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு, நம் நேரத்தைக் களவாடுகிறான் இந்த `கள்வன்’.