டிரென்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் (வெள்ளிக்கிழமை, ஏப்.5) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். இதை அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 10.23 மணி அளவில் லெபனான் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்துக்கு 45 மைல் மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இதுவரை பதிவு ஆகவில்லை என நியூயார்க் நகரின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. களத்தில் இருந்து வரும் தகவலும் இதனை உறுதி செய்துள்ளன. ப்ரூக்லின் பகுதியில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
பால்டிமோர், பிலடெல்பியா, கனெக்டிகட் மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறித்து மக்கள் சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.
“ஹன்டர்டன் கவுண்டியில் உள்ள ரீடிங்டன் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக இது பாதிவானது. அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை செயல்படுத்தி உள்ளோம். அவசரம் இல்லாத பட்சத்தில் 911 எண்ணை அழைக்க வேண்டாம்” நியூ ஜெர்சி ஆளுநர் பில் மர்பி தெரிவித்துள்ளார்.