புதுடெல்லி: “அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். அந்த தொகுதியின் தற்போதைய எம்பி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிரதமர் தனது வழக்கமான பிரசாரத்தை இங்கு தொடர்கிறார் என்றாலும், இந்தியாவின் ஜனநாயகம் தொடர்பாக ராஜஸ்தான் எழுப்பியுள்ள சில முக்கிய கேள்விகள் குறித்தும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்பி ஆனந்த் ஹெக்டே பேசும்போது, மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்று கூறியிருந்தார். ராஜஸ்தானின் நாகோர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தாவும் இதையே கூறி இருந்தார். பாஜக அரசியல் சாசனத்தை திருத்தும் என்றும், அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை தேவை என்றும் ஜோதி மிர்தா கூறி இருந்தார்.
அடுத்தடுத்த பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துகள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகம் எப்படி இருக்கும் என்ற கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் அறிக்கையை பிரதமர் வெளியிடுவாரா?
சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் தேர்தல் இருக்காது என்ற எண்ணத்தை பாஜக தலைவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியின் முன்னாள் எம்பி சந்தோஷ் அஹ்லாவத், அரசு ஊழியர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால், அவர்கள் அரசு அலுவலராக இருக்கும் தகுதியைக் கொண்டிருக்க முடியாது என இந்த மாதத்தின் தொடக்கத்தில் எச்சரித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
பாஜக தலைவர்களின் இத்தகைய பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பேசுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கதா?” என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.